ஈப்போ,
பேராக் மாநிலத்தின் ஈப்போவில் இன்று அதிகாலை போலீசாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஈப்போவின் ஜாலான் பெர்சியாரான் லெம்பா பெர்பாடுவான் (Jalan Persiaran Lembah Perpaduan) பகுதியில் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பேராக் மாநில போலீசார் இணைந்து, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய சந்தேக நபர் தப்பியோட முயன்றதுடன், போலீசாரை நோக்கிப் பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக போலீசாரும் பதிலுக்குத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். அதிகாலை 3.40 மணியளவில் மருத்துவக் குழுவினர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.
மேலும், உயிரிழந்த நபருக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் எஸ். முத்துவேலு கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை முயற்சிக்கான தண்டனைச் சட்டத்தின் 307ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், உயிரிழப்பு அல்லது காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் துப்பாக்கியைப் பயன்படுத்துவது தொடர்பான 1971ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டத்தின் கடுமையான தண்டனைகள் பிரிவு 3இன் கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிட இன்று பிற்பகல் 3 மணிக்கு பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.













