ஷா ஆலாம்:
சிலாங்கூர் மாநிலத்தின் செத்தியா ஆலாம் பகுதியில் உள்ள ஸ்ரீ பினாங் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே இன்று நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சாலை பாதுகாப்புக் கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பெர்சியாரான் செத்தியா மக்மூர் சாலைக்கு அருகிலுள்ள மலைச்சரிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், இந்த நிலச்சரிவில் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்றும், கட்டடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று காலை 11.30 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.
கிள்ளான் செலாத்தான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலைச்சரிவில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், நிலத்தின் நிலைமை அப்போது நிலையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட சாலையைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஷா ஆலாம் மாநகர மன்றம் (MBSA) அறிவித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சுற்றிப் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
சாலை மீண்டும் திறக்கப்படும் வரை வாகன ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலச்சரிவு தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.





















