மலேசியாவைக் கட்டியெழுப்பிய இந்தியர்களின் வரலாறு மறக்கப்படக் கூடாது- டத்தோஸ்ரீ எம். சரவணன்

மலேசியாவின் வளர்ச்சிக்கும் கட்டமைப்புக்கும் அடித்தளமிட்ட இந்தியச் சமூகத்தினரின் வரலாற்றுப் பங்களிப்புகளையும் தியாகங்களையும் ஆவணப்படுத்திப் பாதுகாக்கும் நோக்கில் மலேசிய இந்திய ஆய்வு மையம் (MIRC) நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மையம் இந்திய முன்னோடிகளின் வரலாற்றுப் பதிவுகள், வாய்மொழி வரலாறுகள், கட்டடக்கலை தொடர்பான காலவரிசைத் தகவல்கள் ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வு செய்வதுடன், அவற்றை முறையாக ஆவணப்படுத்தி வெளியிடும் தேசிய அளவிலான மையமாகச் செயல்படும்.

இந்த மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறுகையில், முறையான ஆதாரங்களுடன் வரலாறு பதிவு செய்யப்படாவிட்டால், இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்குள் அந்தப் பங்களிப்புகள் மறக்கப்படும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மலேசியாவின் நவீன கட்டமைப்பை உருவாக்குவதில் நூறாயிரக்கணக்கான இந்திய முன்னோடிகள் அளித்த பங்களிப்புகள் உரிய அங்கீகாரம் பெறாமல் போகக்கூடாது. அவர்களின் தியாகங்களையும் எதிர்கொண்ட சிரமங்களையும் இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கு வரலாற்றுப் பதிவுகள் அவசியம் என்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமாகிய அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, 1881 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழர்கள், கங்காணி முறை, ஒப்பந்தத் தொழிலாளர் திட்டங்கள் வழியாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார வளர்ச்சிக்காகப் பணியாற்றிய வரலாற்றுக்கு இந்த மையம் முக்கியத்துவம் அளிக்கும்.

அக்காலகட்டத்தில் இந்தியத் தொழிலாளர்கள் அடர்ந்த காடுகளை அகற்றி, சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதில் பெரும் பங்காற்றினர். உள்நாட்டுப் பகுதிகளில் இருந்த தகரச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்களைத் துறைமுகங்களுடன் இணைக்கும் ரயில் பாதைகளை அமைப்பதிலும் அவர்கள் உழைத்தனர்.

அதுமட்டுமின்றி, பொதுப்பணித் துறை, நகராட்சி மன்றங்களின் கீழ் நிர்வாகக் கட்டடங்கள், நகர்ப்புறத் தூய்மைக் கட்டமைப்புகள், குடிநீர் வசதிகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை உருவாக்குவதிலும் இந்தியத் தொழிலாளர்கள் பங்களித்துள்ளனர். வெப்பமண்டல நோய்கள், ஆபத்தான பணிச்சூழல், தனிமைப்படுத்தப்பட்ட தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு, மலாயாவை உலகின் முன்னணி இயற்கை ரப்பர் ஏற்றுமதி நாடாக உயர்த்துவதற்கு உதவியதாக சரவணன் தெரிவித்தார்.

இந்த வரலாற்று ஆவணங்கள் பொது ஆவணக் காப்பகங்கள், தேசிய அருங்காட்சியகக் கண்காட்சிகள், பள்ளிப் பாடத்திட்டங்கள் ஆகியவற்றில் இடம்பெறச் செய்வதே ஆய்வு மையத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். மலேசியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில், இந்தியச் சமூகத்தின் பங்களிப்புகளும் நாட்டின் பொதுவான வரலாற்றின் ஓர் அங்கமாக உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக மலேசியா கினி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here