ஜோகூர் மாநிலத்தில் பல இன மக்களிடையே ஒற்றுமையையும் நல்லுறவையும் வலுப்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான ‘ஜாலினான் காசே செகம்போங் பங்சா ஜோகூர்’ திட்டத்தின் கீழ் 1,214 நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுடன், சுமார் 10 லட்சம் மக்கள் பங்கேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார்.
கூலாய், பண்டார் புத்ரா ஹெலாங் குடியிருப்புப் பகுதி திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹுத்தான் பண்டார் வட்டாரத்திற்கான மக்கள் நல்லுறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார். கிராமங்கள், ஊராட்சி மன்றங்களின் கீழுள்ள குடியிருப்புப் பகுதிகள், மக்கள் வீடமைப்புத் திட்டங்கள், பெல்டா, பெல்க்ரா மற்றும் பூர்வகுடியினர் கிராமங்களை உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) கல்விச் சேமிப்பு சார்ந்த உதவிகளையும், தேசிய சேமிப்பு வங்கியின் (BSN) சார்பில் கூலாய் இரவுச் சந்தை சிறு வியாபாரிகளுக்கான வர்த்தக உபகரணங்களையும் அவர் வழங்கினார். பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்கு அடித்தளமிடுவதோடு, சிறு வியாபாரிகளின் வருமானத்தைப் பெருக்கவும் இத்தகைய உதவிகள் துணைபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கூலாய் நகராண்மைக் கழகம், ஜோகூர் மாநில வீடமைப்பு மேம்பாட்டுக் கழகம் (PKPJ), தேசியப் பதிவுத் துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சேவை முகப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன இதன்வழி மலிவு விலை வீடுகள், வீடமைப்பு உதவிகள் உள்ளிட்ட அரசாங்கச் சேவைகள் குறித்த தகவல்களை மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.
இதனிடையே, 2027ஆம் ஆண்டுக்கான ஜோகூர் வரவு செலவுத் திட்டத்தில் ‘ராயா செகம்போங்’ திட்டத்திற்காக மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி 1 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒதுக்கீட்டின் கீழ் நோன்புப் பெருநாளையொட்டி 667 கிராமங்களிலும், சீனப் புத்தாண்டையொட்டி 123 கிராமங்களிலும், தீபாவளியையொட்டி 10 கிராமங்களிலும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக அவர் சொன்னார்.
ஜோகூரின் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே மாநில அரசின் நோக்கமாகும். மக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் இணைந்து அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடவுள்ளதாக டத்தோ ஜஃப்னி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூலாய் நகராண்மைக் கழகத் தலைவர் ஹாஜி முகமட் ஷாரில் அஸிஸி, நகராண்மைக் கழக உறுப்பினர் ஹாஜா நூருல் நாடியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கோகி கருணாநிதி















