கோலாலம்பூர்:
கோல சுங்கை எண்டாவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தனது நெருங்கிய நண்பன் முகமட் நூர் அஃப்சுவார் அப்துல்லா (16), நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு உதவி கேட்டுக் கதறிய குரலை தன்னால் இன்னும் மறக்க முடியவில்லை என 16 வயது சிறுவன் முகமட் அஸ்ருல் அஷ்ரஃப் ஓயோப் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஃபெல்டா கெராத்தோங் பகுதியிலிருந்து தனது மாமா மற்றும் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகவும், மட்டி (Kepah) சேகரிப்பதற்காகவும் அஃப்சுவார் கோல சுங்கை எண்டாவ் பகுதிக்குச் சென்றிருந்தார்.
இச்சம்பவம் குறித்து ரொம்பின் மருத்துவமனை தடயவியல் பிரிவில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ருல் கூறுகையில் “நேற்று முன்தினம் மாலை 4.50 மணியளவில் நான் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தேன். மட்டி சேகரித்து முடித்த அஃப்சுவார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென என் பெயரைச் சொல்லி உதவி கேட்டு அலறினார். இதைக் கேட்டதும் அவனது மாமா உடனடியாக ஆற்றில் குதித்து அவனைக் காப்பாற்ற விரைந்தார்; அவனது கையை எட்டிப் பிடிக்கும் தருவாயில் இருந்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அவ்வழியாகச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்றினால் ஆற்றில் பெரிய அலைகள் ஏற்பட்டன. அதில் சிக்கிய அஃப்சுவார் கண்ணிமைக்கும் நேரத்தில் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானான்.”
கெராத்தோங் பண்டார் துன் ரசாக் தேசிய இடைநிலைப் பள்ளியில் தன்னுடன் ஒன்றாகப் படித்த நண்பன் மிகவும் நல்லவன் என்றும், அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவன் என்றும் அஸ்ருல் உருக்கமாகக் கூறினார்.
உதவி கேட்டுக் கதறிய நண்பனைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்துத் தான் மிகவும் வருந்துவதாகவும், அந்த இறுதி நொடிகளைத் தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும் அவர் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தன்னுடன் கெராத்தோங்கில் வசித்து வந்த அஃப்சுவார் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நல்ல பிள்ளை என அவரது மாமா முகமட் ரஃபி மொக்தார் (31) தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது அவனது முகமும் கால்களும் மிகவும் வெளிறிப் போயிருந்ததாகவும், அது குறித்துக் கேட்டபோது அவன் எதுவும் பேசாமல் புன்னகைத்ததாகவும் நினைவுகூர்ந்த அவர், அதுவே அவனது இறுதிப் பயணத்திற்கான அறிகுறியாக இருக்கும் எனத் தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தார்.
மாயமான சிறுவனின் சடலம், அவன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணியளவில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டதாக ரொம்பின் தீயணைப்பு நிலையத் தலைவர் அஃபாண்டி ஏ. ஹலீம் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ரொம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.






















