காரில் இருந்த 10,000 ரிங்கிட் திருட்டு – சிசிடிவி-யில் சிக்கிய மர்ம நபர்!

பாலிங், ஜனவரி 31:

பாலிங், குபாங் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து பணப்பை திருடப்பட்டதில், பெண் ஒருவர் 10,000 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

நேற்று காலை சுமார் 8.30 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண் தனது டொயோட்டா அவான்சா (Toyota Avanza) காரைச் சூப்பர் மார்க்கெட் வாசலில் இருந்து 15 மீட்டர் தொலைவில் நிறுத்தியுள்ளார்.

தனது வியாபாரத் தொகையான 10,000 ரிங்கிட் இருந்த முதுகுப்பையைக் காரின் உள்ளேயே வைத்துவிட்டு அவர் கடைக்குச் சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பிய பிறகுதான், காரில் இருந்த பை காணாமல் போனதை அவர் கவனித்துள்ளார். இது குறித்து காலை 11.40 மணியளவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது என்று, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ கூறினார்.

கடைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவர், காரின் முன்பக்கப் பயணியர் கதவைத் திறந்து பையைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்வது கேமராவில் பதிவாகியுள்ளது.

திருடப்பட்ட அந்தப் பணம் வங்கி வைப்புச் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த வியாபார வருமானம் ஆகும்.

இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டம் பிரிவு 379-இன் கீழ் (திருட்டு) விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளியைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here