தனது அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் “ஓராண்டுக்கும் மேல் உள்ளது” என்று கூறிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிடவில்லை என மீண்டும் சமிக்ஞை அளித்துள்ளார். நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, தனது நிர்வாகம் மேலும் பலவற்றைச் செய்வதற்கு நேரம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, அரசு “எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்து, எங்கள் செயல்திறனை மேம்படுத்தும்” என்று அன்வார் கூறினார். இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் ‘AI Temu AI’ திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்களுக்கு இன்னும் ஓராண்டுக்கும் மேல் உள்ளது என்றார்.
போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அமைச்சரவை மாற்றத்தை விட, புதிய ஆணையைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதே சிறந்தது என்று துணைப் பிரதமரும், அம்னோ தலைவரும், பாரிசான் நேஷனல் தலைவருமான அமாட் ஜாஹிட் ஹமிடி முன்னதாகக் கூறியிருந்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பாக லோக் நவம்பர் 10 அன்று ராஜினாமா செய்தார். தற்போதைய மக்களவையின் பதவிக்காலம், அது முன்கூட்டியே கலைக்கப்படாவிட்டால், டிசம்பர் 2027இல் முடிவடைய உள்ளது.
அமைச்சரவையில் அந்தோணி லோக்கின் நிலை குறித்துக் கேட்டபோது, அவரின் ராஜினாமாவைத் தான் இன்னும் ஏற்கவில்லை என்றும், சமீபத்தில் டிஏபி பொதுச்செயலாளரைச் சந்தித்ததாகவும் அன்வர் மீண்டும் வலியுறுத்தினார். அவர் அதற்கான காரணங்களைக் கூறினார். நான் அவரை முதலில் விடுப்பில் செல்லுமாறு கூறினேன் என்றார் அவர். இதற்கிடையில் போக்குவரத்து அமைச்சகத்தின் பணிகள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து, அதன் பொதுச்செயலாளரும் துணை அமைச்சரும் அதன் செயல்பாடுகளை மேற்பார்வையிடலாம் என்று அன்வார் கூறினார்.















