ஜோகூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார். இஸ்கண்டார் புத்ரி சன்வே பிக் பாக்ஸ் தங்கும் விடுதியில் நடைபெற்ற அரசு, பல்கலைக்கழகம், சமூகம் மற்றும் தொழில்துறை இடையிலான நிலையான ஒத்துழைப்பு கருத்தரங்கின் (GUCI 2026) நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஆறு நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 25 பேச்சாளர்கள் பங்கேற்றதோடு, 36 திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வாயிலாகக் கிடைக்கும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு நிலப் பயன்பாடு, அடிப்படை வசதிகள், வடிகால் கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் வீடமைப்பு ஆகியவை ஆரம்பக்கட்டத்திலேயே முறையாகத் திட்டமிடப்பட வேண்டும் என்றார் அவர்.

இஸ்கண்டார் புத்ரி மாநகர் மன்றத்தின் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்திற்கான சமூக மானியம் 2024ஆம் ஆண்டு 5 லட்சம் ரிங்கிட்டிலிருந்து 2025ஆம் ஆண்டு 7 லட்சம் ரிங்கிட்டாகவும், 2026ஆம் ஆண்டு 10 லட்சம் ரிங்கிட்டாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு 32 திட்டங்களுக்கு ஏறக்குறைய 10 லட்சம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வீடமைப்புத் திட்டங்களில் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பராமரிப்புச் செலவுகளையும் குடும்பங்களின் செலவினங்களையும் குறைக்க முடியும். அதேவேளையில், தரவு மையங்களின் வளர்ச்சியில் நீர் மற்றும் மின்சாரப் பயன்பாடு முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலத்தின் நகர்ப்புறப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரி, பாசிர் கூடாங் மற்றும் கூலாய் ஊராட்சி மன்றப் பகுதிகளில் இதுவரை 1,615 செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 4,151 கேமராக்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், அவற்றின் மொத்த எண்ணிக்கை 5,766ஆக உயரும் என்றார். மேலும், முதற்கட்ட அறிவார்ந்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திட்டம் 25 சாலைச் சந்திப்புகளை உள்ளடக்கியுள்ளது.

இஸ்கண்டார் புத்ரி மாநகர் மன்றம் அறிவார்ந்த நகரத் தரவரிசையில் இரண்டாம் நிலையை அடைந்துள்ளதோடு, ஜோகூரிலுள்ள 16 ஊராட்சி மன்றங்களும் குறைந்தபட்சம் முதலாம் நிலையை அடைந்துள்ளன. இச்சாதனைகள் மக்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு காணவும், பொதுவசதிகளைச் சிறப்பாகப் பராமரிக்கவும் வழிவகுக்க வேண்டும் என டத்தோ ஜஃப்னி கேட்டுக்கொண்டார்.
கோகி கருணாநிதி















