இடைக்காலக் கட்டத்திற்கு பிறகு UNHCR அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மூன்றாம் நாடுகளில் மீள்குடியேற்றப்படுவார்கள்

அகதிகள்

கோலாலம்பூர் – ஐநா அகதிகள் முகமையின் (UNHCR) அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், இடைக்காலக் கட்டம் முடிவடைந்ததும் மூன்றாம் நாடுகளில் மீள்குடியேற்றப்படுவார்கள். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடாக, தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவே இந்த மீள்குடியேற்றம் அமையும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். இருப்பினும், இந்தச் செயல்முறை முழுமையாக அந்தந்த நாடுகளையே சார்ந்தது என்றும், எந்தெந்த நாடுகள் எத்தனை அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளன மற்றும் அதற்கான நிபந்தனைகள் என்ன என்பதை அந்த நாடுகளே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லைக் கட்டுப்பாடு குறித்த நாட்டின் தற்போதைய அணுகுமுறை, வெறும் சுவர்கள் அல்லது வேலிகளை அமைப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, செயற்கை நுண்ணறிவு (AI), ட்ரோன்கள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ளது. மேலும், மலேசியாவில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்குத் துணைபுரியும் அல்லது அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மலேசியக் குடிமக்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் முறையான உரிமம் அல்லது அனுமதியின்றி வணிகங்களை நடத்துபவர்கள், மற்றும் இத்தகைய செயல்களுக்குத் தங்கள் நிலத்தையோ அல்லது இடங்களையோ பயன்படுத்த அனுமதிக்கும் உரிமையாளர்கள் ஆகியோர் மீது இந்த நடவடிக்கை பாயும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் (Dewan Rakyat) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் (MUDA-மூவார்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதைக் குறிப்பிட்டார். அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன என்பதையும், இடைக்காலக் கட்டம் முடிந்த பிறகு UNHCR மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் வினவியிருந்தார். முன்னதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் அளித்த தகவலின்படி, செப்டம்பர் 30 நிலவரப்படி, மலேசியாவில் UNHCR மூலம் மொத்தம் 227,414 அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் மியான்மரைச் சேர்ந்த 205,273 அகதிகள் (90.2 சதவீதம்) அடங்குவர் என்றும், அவர்களில் 132,400 பேர் ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சைஃபுதீன் தெரிவித்தார். UNHCR ஆவணங்களின்படி, UNHCR அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ளனர் என்றும், அவர்களில் அதிகப்படியானோர் சிலாங்கூரில் 33 சதவீதமும் (74,028), கோலாலம்பூரில் 21 சதவீதமும் (47,333), பினாங்கில் 11 சதவீதமும் (25,357) உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here