டோமி தோமஸுக்கு எதிரான RM1.9 மில்லியன் வழக்கு: மேல்முறையீட்டு மனுவை மீட்டுக்கொண்டார் நஜிப்!

கோலாலம்பூர், 

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸுக்கு எதிராகத் தாம் தொடுத்த 1.9 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டு வழக்கை மீண்டும் தொடர அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த இறுதி மேல்முறையீட்டு மனுவை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இன்று மீட்டுக்கொண்டார்.

இதன் மூலம் ஆறு ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மிக முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த நஜிப் விரும்புவதால் இந்த மனு மீட்டுக்கொள்ளப்படுவதாக அவரது வழக்கறிஞர் ஃபிரோஸ் ஹுசேன் அகமது ஜமாலுடின் கூட்டரசு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிபதி டத்தோஸ்ரீ ஹாஷிம் ஹம்சா தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு, இரு தரப்பு வழக்கறிஞர்களின் இணக்கத்தைத் தொடர்ந்து மனுவைத் தள்ளுபடி செய்தது. வழக்குச் செலவாக 10,000 ரிங்கிட்டை வழங்கவும் நஜிப் ஒப்புக்கொண்டார்.

1எம்டிபி (1MDB) மற்றும் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனம் (IPIC) தொடர்பான வழக்குகளில் தமக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதில் டோமி தோமஸ் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் கூறி, 2020ஆம் ஆண்டு நஜிப் சிவில் வழக்குத் தொடுத்திருந்தார்.

தமது தற்காப்பு வாதத்தைத் தயாரிக்கவும் ஆவணங்களை ஆய்வு செய்யவும் தணிக்கைக் குழுவை நியமித்ததற்கான செலவாக 1.9 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அவர் கோரியிருந்தார்.

2022ஆம் ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பை இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி கடந்த மார்ச் மாதம் நஜிப் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குற்றவியல் வழக்கு விசாரணைகள் தொடங்குவதற்கு முன்பே நஜிப் சிவில் வழக்கைத் தொடுத்திருந்ததாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது ஜனவரி மாதத் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

எனினும், டோமி தோமஸுக்குச் சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும் அவரது நடவடிக்கைகளை நீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த கருத்துகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here