மற்ற 7அமைப்புகளுக்கும் RM1,000 நிலக் குத்தகைப் பிரீமியம்; சீனர் மண்டபத்திடம் மட்டும் விசாரணை ஏன்? – லிம் குவான் எங்

கோலாலம்பூர்,

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தின் (KLSCAH) நிலக் குத்தகை நீட்டிப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), இதே சலுகையைப் பெற்ற மற்ற ஏழு அமைப்புகளிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

4.67 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்ட நிலக் குத்தகைப் பிரீமியத்தை 1,000 ரிங்கிட்டாகக் குறைத்து, சீனர் அசெம்பிளி மண்டபத்திற்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகையை நீட்டிக்க புத்ராஜெயா அனுமதி வழங்கியது தொடர்பில் எம்ஏசிசி விசாரணை நடத்தி வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவின் அரசியல் செயலாளர் யாப் யீ வோன்னிடம் நேற்று ஐந்து மணி நேரம் எம்ஏசிசி விசாரணை நடத்தியது.

கோலாலம்பூரில் இதேபோன்று ஏழு அமைப்புகளுக்கு 1,000 ரிங்கிட் பிரீமியத்தில் 99 ஆண்டுகளுக்கு நிலக் குத்தகை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய லிம், சீனர் அசெம்பிளி மண்டபத்திற்கு மட்டும் எந்தவிதச் சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

முந்தைய ஏழு நிலக் குத்தகை நீட்டிப்புகளுக்கும் அம்னோ அமைச்சர்களின் தலைமையிலான அமைச்சு அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது ஜசெக அமைச்சர் தலைமையிலான அமைச்சு வழங்கிய அனுமதி குறித்து மட்டும் விசாரணை நடத்தப்படுவது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையிலான புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சு, 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையில் அதன் ஒதுக்கீட்டைவிட 2.1 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகச் செலவிட்டதாகத் தாம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் எம்ஏசிசி இதேபோன்ற அவசரத்தைக் காட்டவில்லை என்றும் லிம் கூறினார்.

எனினும், இக்குற்றச்சாட்டை நிராகரித்த ஜாஹிட், அந்த 2.1 பில்லியன் ரிங்கிட் என்பது ஆரம்ப நிதி ஒதுக்கீட்டிற்கும் திருத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கும் இடையிலான வித்தியாசமே தவிர, நிதி காணாமல் போனதற்கான ஆதாரம் அல்ல என்று விளக்கமளித்திருந்தார்.

அதிகாரப்பூர்வ புகார் கிடைத்தால் விசாரணை நடத்தப்படும் என எம்ஏசிசியும் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது.

சீனர் அசெம்பிளி மண்டபம் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என்பதுடன், அந்த அமைப்பிடமிருந்து ஹன்னா இயோவுக்குப் பணம் கைமாறியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் லிம் தெரிவித்தார்.

இதேபோன்ற நிலக் குத்தகை நீட்டிப்புச் சலுகையைப் பெற்ற ஏழு அமைப்புகளில் மலேசிய செம்பிறைச் சங்கம், மலேசிய பூப்பந்துச் சங்கம், தேசிய மகளிர் அமைப்புகளின் மன்றம், மலேசிய சிறார் நல மன்றம் உள்ளிட்ட அமைப்புகளும் அடங்கும்.

ஊழல் நடந்ததாகச் சந்தேகிப்பதற்கான காரணம் இல்லாத நிலையில், எந்த அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது என்றும், இதேபோன்ற அனுமதிகளை வழங்கிய முந்தைய அம்னோ அமைச்சர்களிடம் விசாரணை நடத்தாதது ஏன் என்றும் லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here