ஜோகூர் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையில், 2027 ஜூன் மாதத்தில் ஏழாவது கட்ட ஜோகூர் அன்பு உதவித் திட்டம் (BKJ) செயல்படுத்தப்படும் என மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபீஸ் காஸி அறிவித்தார். இதற்காக RM90.2 மில்லியனை மாநில அரசு ஒதுக்கியுள்ள நிலையில், 4 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தலா RM200 உதவித்தொகையைப் பெறவுள்ளனர். குறிப்பாக, முதியோர், புற்றுநோய் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர், பி40 பிரிவைச் சேர்ந்த சிறுதோட்டக்காரர்கள் ஆகியோரின் நலனுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோருக்கு RM83 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பெறும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு RM2.9 மில்லியன் வழங்கப்படவுள்ளது.இதனிடையே, 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி40 பிரிவு சிறுதோட்டக்காரர்களுக்காக RM4.3 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே 2027ஆம் ஆண்டுக்கான ஜோகூர் வரவு செலவுத் திட்டத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது கட்ட உதவித் திட்டங்கள் முறையே இவ்வாண்டு டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதங்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தின் வருவாய் உயரும்போது அதன் பலன்கள் மேலும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில், உதவித் திட்டங்களை விரிவுபடுத்த மாநில அரசு தயாராக உள்ளது.அதன் தொடர்ச்சியாக, மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டு தற்போது ஏழாவது கட்ட உதவித் திட்டத்திற்கும் மாநில அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. கோத்தா இஸ்கந்தரில் உள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டடத்தில் இன்று நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்திற்குப் பதிலளித்தபோது ஓன் ஹபீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.















