நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி! புதிய ஆட்சிக்குழு நியமனம் குறித்து ஸாஹிட் நம்பிக்கை

பாகன் டத்தோ,

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆறு புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நேற்று நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நிலவிவந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கிய நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிருக்கு அம்னோவும் தேசிய முன்னணியும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக துணைப் பிரதமருமான ஸாஹிட் கூறினார்.

இந்த நியமனத்தின் மூலம் மாநில சட்டமன்றத்தில் சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை நடத்துவது உள்ளிட்ட தனது பொறுப்புகளை மாநில அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றுவதோடு, மக்களுக்கான சேவைகளையும் தொடர முடியும் என்றார் அவர்.

“அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாக நம்புகிறேன். இனி புதிய பிரச்சினைகள் எழாது என எதிர்பார்க்கிறோம்,” என்று பாகன் டத்தோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த தீர்வைக் காணும் நோக்கில், தாம் உட்பட அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் ஐந்து முக்கியத் தலைவர்கள் கடந்த வியாழக்கிழமை துவாங்கு முஹ்ரிஸைச் சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

அரண்மனையின் முடிவுகளையும் ஆட்சியாளரின் உத்தரவுகளையும் நெகிரி செம்பிலான் மாநில மக்கள் அனைவரும் மதித்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஸாஹிட் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, கோத்தா சட்டமன்ற உறுப்பினர் சுஹைமி ஐனி, ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ஸைடி அப்துல் காதிர், கெமாஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிட்ஸுவான் அகமட், பாகன் பினாங் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ஃபத்தா ஸக்காரியா, செனாலிங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் கய்யும் அப்துல் ஜலீல், ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் கோ கிம் சுவீ ஆகிய அறுவரும் நேற்று ஆட்சிக்குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.

தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த 24 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சித் தலைமைகளின் முடிவுகளுக்குக் கட்டுப்பட இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் பின்னணியில், முன்னர் 10 உறுப்பினர்களைக் கொண்டிருந்த மாநில ஆட்சிக்குழுவின் அமைப்பில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here