மலேசியர்களாகப் பிறந்தும் கண்ணுக்குப் புலப்படாத மக்களாக வாழும் அவலம்

மலேசியப் பிரஜையாக மண்ணில் புதைக்கப்பட வேண்டும், ஏங்கும் நாடற்ற பிரஜைகள்

பி.ஆர். ராஜன்

கோலாலம்பூர், ஜூலை 21-

 

மலேசியாவில் எவ்வளவு பேர் நாடற்றவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு அதிகாரப்பூர்வப் பதிவுகளோ தகவல்களோ இல்லை. இந்தக் கண்ணுக்குப் புலப்படாத மக்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது?

இங்குள்ள ஓர் அரசு சாரா அமைப்பு மலேசியர்களாக இருக்க வேண்டியவர்கள் குடியுரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக இருக்கும் மக்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து வருகின்றது.

2016ஆம் ஆண்டில் இருந்து 2023 ஜூன் மாதம் வரை தீபகற்ப மலேசியாவில் 16,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக இருக்கின்றனர் என்று டிரா மலேசியா எனப்படும் புறநகர்ப் பகுதி மனித வளங்கள் மேம்பாடு எனும் அந்த அரசு சாரா அமைப்பு இந்தப் புள்ளி விவரங்களைச் சேகரித்துத் தொகுத்து வருகிறது.

டிரா மலேசியா அடையாளம் கண்டிருக்கும் 16,392 நாடற்றவர்களுள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் தற்போது மலேசியர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சிய 9,392 பேர் இன்னமும் நாடற்றவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர்.

நாடற்ற 8,223 பிள்ளைகள்

இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய பகுதியாக சிறார்கள் விளங்குகின்றனர். கிட்டத்தட்ட 8,223 சிறார்கள் நாடற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டிருக்கின்றனர். பதிவுபெறாத திருமணம், தகாத உறவுகளால் பிறக்கும் பிள்ளைகள், மலேசியர்களால் தத்தெடுக்கப்படும் பிள்ளைகள் ஆகியோர் இதில் இடம்பெற்றிருக்கின்றனர்.

இவர்களைத் தவிர்த்து சுதந்திரத்திற்கு முன்னதாக உள்ள நாடற்றவர் பட்டியலில் 1,003 பேர் இடம்பெற்றிருக்கின்றனர்.  1957ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இங்கு வந்து குடியேறியவர்களுக்குப் பிறந்த குழந்தைகளாக அவர்கள் உள்ளனர்.

ஆனாலும் இவர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. 166 குழந்தைகள் அல்லது சிறார்கள் பெற்றோரால் கைவிடப்பட்டிருக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோர் குடியுரிமை கோரி விண்ணப்பம் செய்திருக்கின்றனர். 2016ஆம் ஆண்டில் அதாவது கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

ஒன்று, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது புதிய விண்ணப்பங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கலாம்.

அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை

நாடற்றவர்களாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை பெற முடியாமல் இவர்களின் அந்தஸ்து கேள்விக்குறியாக இருக்கிறது. சிறார்களுக்கு இந்நிலை என்றால் சற்று இளம் வயதினரின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. அவர்களால் வேலை செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

அடையாள ஆவணங்கள் இல்லாததால் சாதாரண தொழிலாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய எந்தச் சலுகையும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.

நாடற்றவர்களாகக் கருதப்படும் இந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலானவர்கள் மலேசியர்களாகப் பிறந்தும் இந்த மண்ணின் மைந்தர்களாக முறையான ஆவணங்களுடன்

அங்கீகரிக்கப்படாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

விடிவுகாலம் எப்போது?

பெற்றோரின் தவறுகளால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் இந்தத் துன்பத்தை அனுபவிக்கின்றனர். பிறப்புச் சான்றிதழ், இதர அடையாள ஆவணங்கள் இல்லாத நிலையில் இந்தப் பிள்ளைகளை  இந்நாட்டுக் குடிமக்களாக அங்கீகரிப்பதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சிறார்களுக்கு மை காஸ் எனும் பச்சை நிற  தற்காலிகக் குடியிருப்பு அடையாளக்கார்டை தேசியப் பதிவிலாகா வழங்குகிறது. இந்தக் கார்டை வைத்திருப்பவர்கள் 12 மாதங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மலேசியாவில் தங்கியிருக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். காலாவதியாகும்போது அதனைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மை காஸ் என்பது மலேசியக் குடியுரிமைக்கான அந்தஸ்து என்று அர்த்தமாகி விடாது. மலேசியாவில் தற்காலிகமாகத் தங்கி இருப்பதற்கான ஒரு தற்காலிக அடையாள அட்டைதான்.  இந்தக் கார்டை வைத்திருப்பவர்கள் வெளியில் செல்லலாம், வேலைக்குப் போகலாம், அரசாங்க இலாகாக்களில் அவர்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

9,392 பேர்  நிலை என்ன?

எல்லாவற்றுக்கும் மேலாக  9,392 பேர் இன்னமும் நாடற்றவர்களாக இருக்கின்றனர். மேலும் 500 கோப்புகள் டிரா மலேசியா வசம் உள்ளன. இவற்றை முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை நிர்ணயம் செய்து தேசிய பதிவிலாகாவில் சமர்ப்பிக்கப்படுவதற்குத் தயார்ப்படுத்தப்படும்.

இது ஒரு சாதாரணமான எண்ணிக்கை கிடையாது. மிகப்பெரிய எண்ணிக்கை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கையில் எப்போதுதான் ஒளியேற்றி வைக்கப்படும் என்பது தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் வெளிச்சத்தில் வாழ்ந்தாலும் உண்மையான வாழ்க்கையைய் பொறுத்தவரை இன்னும் இருளில்தான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்; உழன்று கொண்டிருக்கின்றனர்.

மலேசியர்களாகப் பிறந்த இவர்கள் நாடற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்பட்டால் எந்த நாட்டிற்குத்தான் இவர்கள் செல்வார்கள்? நாடற்றவர்களின் இந்த எண்ணிக்கையானது அடையாளம் காணப்பட்டதை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த 16 ஆயிரம் பேரும் டிரா மலேசியாவில் பதிவு செய்து கொண்டிருப்பதால் அவர்களின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் தங்களைப் பதிந்து கொள்ளாதவர்கள் பல ஆயிரம் பேர் வெளியில் இருப்பதையும் நிராகரிக்க முடியாது.

அந்நிய நாட்டவர்களுக்கு அடையாள அட்டைகள் கிடைப்பது எப்படி?

இவற்றுக்கு  மத்தியில் சில குறிப்பிட்ட அந்நிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்நாட்டில் அடையாளக்கார்டு வழங்கப்படுவது எப்படி என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக சபாவில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான்  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடையாளக்கார்டு வழங்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் ஏற்கெனவே ஒரு புயலை ஏற்படுத்தி ஓய்ந்து போயிருக்கிறது.

மேலும் அகதிகளாக வந்த சிலரும் அவர்கள் வசம் அடையாளக்கார்டை வைத்திருப்பதும் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

கோவிட்-19 தொற்றுப் பரவல் காலத்தில் அரசாங்க உதவிகளைப் பெறுவதற்கும் உணவு வகைகள் வழங்கப்படுவதற்கும் டிரா மலேசியா நடத்திய தகவல் சேகரிப்பில் நாடற்றவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது.

திருமணப் பதிவு இல்லாததும் ஒரு காரணம்

நாடற்ற பிள்ளைகள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதற்கு அவர்களின் பெற்றோர் அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்யாததும் முக்கியக் காரணமாக இருக்கிறது.

தங்களது திருமணத்தைத் தேசியப் பதிவிலாகாவில் முறையாகப் பதிவு செய்வதற்குப் பெற்றோர் தவறும்பட்சத்தில் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு அடையாள ஆவணங்களை எடுக்க முடியாத நிலையில் நாடற்றவர்களாக அவர்கள் கருதப்படுகின்றனர்.

இந்தப் பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. ஆரம்பக் கல்வியைப் பெற முடியாத ஓர் இக்கட்டான சுழ்நிலையை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் எந்தச் சலுகையையும் அவர்களால் பெற முடியாத நிலையும் இருக்கிறது.

அரசாங்கம் கருணை காட்ட வேண்டும்

நாடற்றவர்கள் பட்டியலில் மிக அதிகமாக இடம்பெற்றிருப்பவர்கள் மலேசியக் குடிமக்களுக்குப் பிறந்த பிள்ளைகளாவர். இவர்களின் எதிர்கால நலனைக் கருதி இவர்கள் சமர்ப்பித்திருக்கும் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து குடிமக்கள் எனும் அந்தஸ்தை அரசாங்கம் வழங்க வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் அனுகூலங்களையும் இழந்து விட்டிருக்கும் இவர்கள் உயிர் பிரிந்த பின்னர் மலேசியக் குடியுரிமை பெற்றவர்களாக இந்த மண்ணில் புதைக்கப்பட வேண்டும் என்ற தீராத குறிக்கோளைக் கொண்டிருக்கின்றனர்.

அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் செல்லாக்காசாகக் கருதப்படுகின்றனர். இவர்களால் அவர்களுக்கும் பயனில்லை, மற்றவர்களுக்கும் பயனில்லை என்ற ஒரு பொல்லாத நிலை ஏற்படுகிறது. குடியுரிமை பெறுவதற்கு இவர்கள் மலையைக் கயிற்றில் கட்டி இழுப்பது போன்று மிகப்பெரிய போராட்டத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் வலி, வேதனைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியுரிமை அந்தஸ்தைத் தந்து இவர்களை இம்மண்ணின் பிரஜைகளாக வாழ்வதற்கு இந்நாட்டு அரசாங்கம் வகை செய்ய வேண்டும்.

இந்தப் பிரச்சினை இன்று நேற்றல்ல,  நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஒரு தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது. நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். நாடற்றவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தர  வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here