ஈப்போ,
பேராக் மாநிலத்தின் மஞ்சோங் அருகே சித்தியவான், ஆயர் தாவார் பகுதிகளில் ஆயுதமேந்திய கும்பல் கொள்ளை மற்றும் வீடுடைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தோனேசியப் பிரஜைகள் என நம்பப்படும் இந்நால்வர் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று அதிகாலை வரை இரண்டு கும்பல் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் நான்கு வீடுடைப்பு முயற்சிகள் குறித்து புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
முகமூடி அணிந்திருந்த சந்தேக நபர்கள் பாராங்கத்திகளுடன் அதிகாலை வேளையில் வீடுகளுக்குள் புகுந்தது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடுகளில் இருந்தவர்களைக் கட்டிப்போட்ட பின்னர் கைத்தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள், காலணிகள் மற்றும் ரிம20,000 ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக்கொண்டு அக்கும்பல் தப்பிச் சென்றதாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 395/397ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இச்சம்பவங்கள் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் 05-688 6222 என்ற தொலைபேசி எண்ணிலோ, 017-682 8005 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்திலோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஈப்போவில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி நிகழ்ந்த வீடுடைப்புச் சம்பவம் தொடர்பில் 29 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள், இரண்டு பெண்கள் என ஐந்து உள்நாட்டவர்களை போலீசார் கடந்த நவம்பர் 25ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு ஏற்கெனவே 39 குற்றவியல் வழக்குகள், 14 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் என மொத்தம் 53 முந்தைய பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஈப்போ மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு வீடுடைப்புச் சம்பவத்திலும் கேபிள் திருட்டுச் சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு உதவும் வகையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.















