இணைய வணிகத் தளங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதையும், தடைசெய்யப்பட்ட சேவைகள் வழங்கப்படுவதையும் கட்டுப்படுத்த சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் எனத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். இணையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசுத் துறைகள், சட்ட அமலாக்க அமைப்புகள், இணைய வணிக நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்தச் சிறப்புப் பணிக்குழுவில் சட்ட அமலாக்க அமைப்புகள், ஒழுங்குமுறை ஆணையங்கள், தொடர்புடைய தரப்பினர் இடம்பெறுவர். இணையத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்தல், அமலாக்கப் பணிகளை ஒருங்கிணைத்தல், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் ஆகிய பொறுப்புகளை இக்குழு மேற்கொள்ளும். மேலும், இணையத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், சேவைகள் தொடர்பான பதிவேடு உருவாக்குதல், அவற்றை இணையத் தளங்களிலிருந்து அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்தல், விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களைக் கோருதல், பாதுகாத்தல், வெளியிடுதல் ஆகியவற்றுக்கான நடைமுறைகளும் உருவாக்கப்படும் என அவர் கூறினார்.
இணைய வணிகத் தளங்கள் அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதோடு, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் ஏற்பாடு செய்த இப்பயிலரங்கின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 16 அமைச்சுகள், சட்ட அமலாக்க அமைப்புகள், ஒழுங்குமுறை அமைப்புகள், 13 இணைய வணிகத் தளங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரி ராஜா















