பெட்டாலிங் ஜெயா,
பயணிகளின் வசதியை மேம்படுத்துவதோடு, ரயில் பெட்டிகளுக்குள் ஏற்படும் இரைச்சலைக் குறைக்கும் நோக்கில் கிளானா ஜெயா எல்ஆர்டி வழித்தடத்தின் தண்டவாளங்களை மாற்றும் பணிகளை ரேபிட் ரயில் நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2027 செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கெரிஞ்சி மற்றும் அப்துல்லா ஹுக்கும் நிலையங்களுக்கு இடையிலான வளைவுப் பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பராமரிப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இப்பணிகள், சிறப்புத் திட்டத்தின் வாயிலாக ஓராண்டுக்குள் நிறைவுசெய்யப்படும் என கிளானா ஜெயா வழித்தடத்தின் பொறியியல் பிரிவுத் தலைவர் நிக் பைசல் நிக் முஸ்தபா தெரிவித்தார்.
தண்டவாளங்கள் தேய்மானமடைந்துள்ளதால் ரயில்கள் பயணிக்கும்போது அதிக அதிர்வும் இரைச்சலும் ஏற்படுவதுடன், ரயில்களின் உதிரிப்பாகங்களும் பாதிக்கப்படக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.
பராமரிப்புப் பணிகளின்போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையே இலவச இணைப்புப் பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில் சமிக்ஞை கட்டமைப்பு, இலக்கமுறை கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் ரயில் நிலைய நடைமேடைப் பாதுகாப்புத் தடுப்புகளை நிறுவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.













