கோடியாங்கில் சந்துனி மடானி திட்டம்; கிராம மக்களுக்கு பல்வேறு சேவைகள்

கோடியாங் –

அரசாங்கச் சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு (KPKT), சந்துனி மடானி திட்டத்தின் வாயிலாகப் பல்வேறு மக்கள் நலச் சேவைகளை வழங்கி வருகிறது.

அவ்வகையில், கெடா மாநிலத்தின் கோடியாங், கம்போங் தோக் கெப்பாக்கிலுள்ள அல் ஹுடா பள்ளிவாசல் வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்துனி மடானி நிகழ்ச்சியை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ வீரா டாக்டர் எம். நூர் அஸ்மான் தாயிப் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

குபாங் பாசு நகராண்மைக் கழகம், கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு (JKKK), கிராம சமூக நிர்வாக மன்றம் (MPKK), அல் ஹுடா பள்ளிவாசல் நிர்வாகக் குழு, தோக் கெப்பாக் தேசிய இடைநிலைப்பள்ளி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட சந்துனி மடானி கொள்கையின் அடிப்படையில், பொதுமக்கள் அரசாங்கச் சேவைகள், தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கான தளமாக இத்திட்டம் விளங்குகிறது.

இதன் வாயிலாக அரசாங்கம் தொடர்பான பல்வேறு விவகாரங்களை மக்கள் எளிதாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடிகிறது.

ஒரே இடத்தில் பல்வேறு சேவைகள்

மக்களுக்கான சேவைகள் முழுமையாகவும் சிறப்பாகவும் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசாங்க இலாகாக்களும் நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.

மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறை, திடக்கழிவு நிர்வாகம் மற்றும் பொதுத் துப்புரவுக் கழகம் (SWCorp), சாலைப் போக்குவரத்து இலாகா (JPJ), தேசியப் பதிவிலாகா (JPN), கெடா மாநில விவசாய இலாகா, சுகாதார இலாகா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு நேரடிச் சேவைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ரஹ்மா மடானி மலிவு விற்பனை, வாகனமோட்டும் உரிமம் மற்றும் சாலை வரியைப் புதுப்பித்தல், அடையாள அட்டை தொடர்பான சேவைகள், மறுசுழற்சிப் பொருட்கள் மூலம் வருமானம் ஈட்டும் ‘Trash to Cash’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.

அத்துடன் இலவச மருத்துவ, பல் பரிசோதனைகள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு, மரக்கன்றுகள் விநியோகம், முதலுதவி மற்றும் அவசர உயிர்காப்பு சிகிச்சை (CPR) செயல்விளக்கங்களும் வழங்கப்பட்டன.

தகுதியுடைய குடியிருப்பாளர்களுக்குத் தலைக்கவசங்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் சிறார்களுக்கு இலவசத் தலைக்கவசங்களும் வழங்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆரம்பகட்ட வருகையாளர்களுக்கு எஞ்சின் எண்ணெய் மாற்றும் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை

மக்கள் எந்தப் பகுதியில் வசித்தாலும், அவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும் அரசாங்கச் சேவைகளை நேரடியாகப் பெற்றுப் பயனடைவதை உறுதிசெய்வதில் மடானி அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டை இத்திட்டம் பிரதிபலிப்பதாக டத்தோ வீரா டாக்டர் நூர் அஸ்மான் தெரிவித்தார்.

மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கும் இத்தகைய அணுகுமுறை, பொதுமக்களின் அன்றாட விவகாரங்களை எளிதாக்குவதோடு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவையும் வலுப்படுத்துகிறது.

மக்களின் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இத்தகைய முயற்சிகளை அமைச்சு தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆதரவு

அரசாங்கச் சேவைகள் மட்டுமின்றி, சமூக ஒற்றுமை, ஆன்மிகம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அல் ஹுடா பள்ளிவாசலில் செமாராக் சுபுஹ் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான நடைப்பயிற்சி நடவடிக்கையும் நடைபெற்றன.

நகர்ப்புற சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (PEKB) கீழ் அரசு சாரா இயக்கங்களின் ஒத்துழைப்புடன் பொதுமக்களுக்கு இலவச முடிதிருத்தும் சேவையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக மகளிரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் சமையல் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் சமையல் போட்டியும் நடத்தப்பட்டது.

அரசாங்க அமைச்சுகள், இலாகாக்கள், தனியார் துறையினர் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகளை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here