தானா மேரா, கம்போங் பெரல்லாவில் உள்ள இரப்பர் தோட்டத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு விவசாயிக்கு சொந்தமான 13 நாட்டு மாடுகளில் 6 பசுக்களை புலி தின்றுவிட்டதால், அவருக்கு சுமார் RM15,000 இழப்பு ஏற்பட்டது.
நேற்று காலை 9.30 மணியளவில், தனது மாட்டுத் தொழுவத்தின் வேலி சேதமடைந்திருந்ததை தான் கண்டதாக, அதன் உரிமையாளர் வான் முகமட் ஸ்ரீ வான் இஸ்மாயில், 60, கவனித்தார்.
“அந்த வேலியை சரிசெய்ய முயற்சிக்கும் முன், எனது மாட்டுத் தொழுவத்தை அந்நியர்கள் யாரோ ஆக்கிரமித்திருக்கலாம் என்று தான் முதலில் சந்தேகப்பட்டேன், வேலியைச் சரிசெய்துவிட்டு, நான் நேராக தொழுவத்திற்குச் சென்றேன், அங்கு இரண்டு மாடுகள் இறந்துவிட்டன, மற்றய நான்கு பசுக்கள் காயங்களுடன் இருந்தன,” என்று அவர் கூறினார்.
இறந்த இரண்டு பசுக்களும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகவும், கழுத்தின் பின்பகுதியில் புலி தாக்கியது போன்ற அடையாளங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தனது வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த இரப்பர் தோட்டத்திற்கு தினமும் தான் சென்று, தனது கால்நடைகளுக்கு உணவு, தண்ணீர் கொடுத்துவருவதாகவும், இவ்வாறு தனது மாடுகள் புலிகளால் தாக்கப்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“இந்த சம்பவத்தை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் தெரிவித்துள்ளேன், ஏனெனில் மாட்டுக்கொட்டகையிலும் இதே தாக்குதல் மீண்டும் நிகழும் என்று எண்ணி நான் கவலைப்படுகிறேன்,” என்றார்.
தற்போது அந்த இரப்பர் தோட்டப் பகுதியில் பொறிகள் பொருத்தப்பட்ட நிலையில், மீதியுள்ள ஏழு மாடுகளை வேறொரு தொழுவத்திற்கு மாற்றியதாக ஸ்ரீ கூறினார்.










