ஆப்பிரிக்காவில் மர்ம காய்ச்சல்- இதுவரை 79 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்காவில் மர்மக் காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அறியப்படாத நோய் காங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நோய் கடந்த நவம்பர் 10 முதல் காங்கோவில் இதுவரை 300 பேரை பாதித்துள்ளது. இந்த மர்ம நோய் காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசப் பிரச்சினை மற்றும் இரத்த சோகை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இறந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடையாளம் காணப்படாத காய்ச்சல் போன்ற நோய் தென்மேற்கு காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தில் கண்டறியப்பட்டது. நோயின் தன்மை குறித்து கண்டறிய குவாங்கோ மாகாணத்திற்கு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மர்ம காய்ச்சல் தொடர்பாக மக்கள் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.சோப்பு போட்டு கைகளை கழுவவும், மக்கள் கூடுவதை தவிர்க்கவும், தகுதியான சுகாதார பணியாளர்கள் இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை தொடுவதை தவிர்க்கவும் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆப்பிரிக்கா பிராந்திய அதிகாரி பிபிசியிடம், “ஆய்வக விசாரணைகளுக்காக மாதிரிகளை சேகரிக்க தொலைதூர பகுதிக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று சிவில் சமூகத் தலைவர் சிம்போரியன் மன்சான்சா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here