லக்னோ,உத்தரபிரதேசத்தில் சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 9 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசி தாயே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்துகொண்ட அஞ்சு தேவி (27 வயது) என்ற பெண் தனது 9 மாத ஆண் குழந்தையுடன் தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சு தேவியின் மூத்த சகோதரி மனிஷாவும் கடந்த இரண்டு மாதங்களாக அதே வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சகோதரிகளுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அஞ்சுதேவி தனது 9 மாத குழந்தையை வீட்டின் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். சகோதரியை சிக்க வைப்பதற்காக அவர் இதை செய்ததாக கூறப்படுகிறது. அஞ்சுவின் தாய் ஷோபா தேவி குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஷோபா தேவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஞ்சு தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








