கோலாலம்பூர்,
வேலை இடத்திற்கு வெளியே நிகழும் விபத்து பாதுகாப்புத் திட்டத்தை (SKBBK) மனிதவள அமைச்சு அமல்படுத்துவதற்கு அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக அதன் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் கூறினார்.
ஒரு தொழிலாளிக்கு வாரம் 7 நாட்களிலும் 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு பொகேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் அத்திட்டத்தை நிர்வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பரீட்சார்த்த காலத்தில் இத்திட்டத்தைப் பெர்கேசோ நிர்வகித்து தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.
மலேசியாவுக்குள் வேலை நேரத்திற்கு அப்பால் நிகழும் விபத்துகள், பயணம் செய்து கொண்டிருக்கும்போது நிகழும் விபத்துகள் ஆகியவற்றில் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கு இத்திட்டத்தை மனிதவள அமைச்சு பரிந்துரைத்துள்ளது. வேலைக்குத் தொடர்பில்லாத பயணமாக இருந்தாலும் விபத்து நிகழும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு முழுமையான பாதுகாப்பை இத்திட்டம் வழங்கும் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் வளர்ச்சியில் இது ஒரு புதிய தாக்கத்தையும் பயனையும் தந்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் முதலாளி தரப்பினர் வேலை நேரத் தளர்வு, வேலை நேர மாற்றம் ஆகியவற்றை அமல்படுத்தலாம் என்று மனிதவள அமைச்சு பரிந்துரை செய்திருக்கிறது.
வேலை நேரம், வேலைக்கு அப்பால் நிகழக்கூடிய விபத்துகளில் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒரு முக்கிய கேந்திரமாக வேலையிடத்திற்கு வெளியே நிகழும் விபத்து பாதுகாப்புத் திட்டம் திகழ்கிறது என்று அப்துல் ரஹ்மான் கூறினார்.
வேலை நேரத்தில், பணி இடத்தில் நிகழும் விபத்துகளுக்கு மட்டுமே தற்போது சமூகப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்போது பணி நேரத்திற்குப் பிறகும் அந்தப் பாதுகாப்பு தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்று இத்திட்டம் தொடர்பில் ஆயர் ஹீத்தாம் பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ வீ கா சியோங், தாப்பா பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அவர் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பதிலளித்தார்.
இத்திட்டம் தொடர்பான சட்ட மசோதாவை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மனிதவள அமைச்சு சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார். இதன் தொடர்பில் சிறு, நடுத்தர எண்டர்பிரைஸ் (எஸ்எம்இ), மலேசிய முதலாளிகள் சங்கச் சம்மேளனம், மலேசிய தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கச் சம்மேளனம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பெர்கேசோ சந்திப்புகளை நடத்தி இருக்கிறது.
அதேசமயத்தில் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியூசி), பொதுச்சேவை தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் (கியூபெக்ஸ்) ஆகிய தரப்புகளுடனும் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன என்று துணை அமைச்சர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு 86,529 விபத்துகள் பெர்கேசோவிடம் புகார் செய்யப்பட்டன. இவற்றுள் 19,955 சம்பவங்கள் வேலை இடத்திற்கு வெளியே நிகழ்ந்த விபத்துகளாகும். ஒவ்வொரு நாளும் 54 விபத்துகள் வேலை நேரத்திற்கு வெளியே நிகழ்வதாக புள்ளி விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் பெர்கேசோ உதவித்திட்டங்களைப் பெறுவதற்கு வாய்ப்பின்றி இருக்கின்றனர் என்று அப்துல் ரஹ்மான் மக்களவையில் தெரிவித்தார்.














