மலேசியாவில் விளையும் பழங்களுக்கு விற்பனை வரி இல்லை நிதி அமைச்சு விளக்கம் .

கோலாலம்பூர்,

ழங்கள் மீது எஸ்எஸ்டி எனப்படும் விற்பனைச் சேவை வரி விதிக்கப்படுவது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்கு நிதி அமைச்சு நேற்று விளக்கமளித்திருக்கிறது. உள்நாட்டில் பயிர் செய்யப்படும் ஏராளமான பழங்களுக்கு 5 விழுக்காடு எஸ்எஸ்டி வரி விதிக்கப்படுவதாக கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இளநீருக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் விளக்கமளித்திருக்கிறார்.

விற்பனை வரிச் சட்டத்திற்கு ஏற்ப உள்நாட்டுப் பழங்களுக்கு வரி விதிக்கும் நிபந்தனை ஏதும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். இந்தச் சட்டத்தின் கீழ் பதனீடு செய்யப்படும் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் உள்நாட்டுப் பொருட்களுக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் இந்தச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படுகிறது. ஆகவே உள்நாட்டுப் பழங்களுக்கு விற்பனை வரி விதிக்க நடைமுறை ஏதும் இல்லை என்று அவர் விளக்கமளித்தார்.

வரும் ஜூலை முதல் தேதி முதல் விற்பனை சேவை வரி விரிவுபடுத்தப்படுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் இறக்குமதி பொருட்களுக்கும் விற்பனை வரி விதிக்கப்படுகிறது. ஆனால் மலேசியாவில் உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களுக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்படாத விவசாயப் பொருட்களுக்கும் விற்பனை வரி இல்லை என்று நிதி அமைச்சு தெளிவுபடுத்தியது.

ஆனால் பழங்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் அந்தப் பழங்களுக்கு விற்பனை வரி உண்டு. வாழைப்பழம், அன்னாசிப்பழம், ரம்புத்தான் போன்றவை இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் அவற்றுக்கு விற்பனை வரி விதிக்கப்படும் என்றும் நிதி அமைச்சு கூறியது. இதற்கிடையே வரும் ஜூலை முதல் தேதிக்குள் சேவை வரி அமல்படுத்தப்படுவது என்பதானது போதுமான கால அவகாசமாக அமையவில்லை என நிறுவனங்கள் கூறியிருப்பதையும் நிதி அமைச்சு கவனத்தில் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here