ரவாங் பண்டார் கண்ட்ரி ஹோம்ஸில் இன்று காலை பருத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. இருப்பினும் யாரும் இந்த தீ விபத்தில் காயம் அடையவில்லை. ஜாலான் குண்டாங்கின் பத்து 22 இல் உள்ள கேர்ஃப்ரீ காட்டன் இண்டஸ்ட்ரியல் சென். பெர்ஹாமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 10.14 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மத் முகலிஸ் முக்தார் தெரிவித்தார். அவர்கள் வந்தபோது தொழிற்சாலை ஏற்கெனவே மோசமாக சேதமடைந்திருந்தது.
தீயணைப்பு வீரர்கள் காலை 11.25 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் 90% பகுதி எரிந்து நாசமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.








