“போருக்கு பதிலாக அமைதி – உலகத்திற்கு அரிய செய்தி” : பிரதமரை பாராட்டிய சிலாங்கூர் மாநில முதல்வர்

ஷா ஆலம்,

தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையேயான எல்லைத் தகராறைச் தீர்க்கவும், போர் நிலையை தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் நிதானமாக செயல்பட்டதன் வழி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஆசியான் மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார் என சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று பாராட்டினார்.

“மலேசியாவின் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுகள், ஆசியானில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியதுடன், வட்டார அரசியல் மேடையில் அன்வார் காட்டிய தலைமைத்துவமும், கண்ணியமும் பரவலாக பாராட்டப்படுகின்றன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்வாரின் தீர்க்கதரிசனமும், நிதானமும், தேசபற்று கொண்ட அணுகுமுறையும் எதிர்காலத்தில் உள்ள வட்டாரத் தகராற்களுக்கு தீர்வாக இருக்கும் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டும் என அமிருடின் வலியுறுத்தினார்.

தாய்லாந்து இடைக்காலப் பிரதமர் பும்தான் வெச்சாயாச்சாய் மற்றும் கம்போடியா பிரதமர் ஹூன் மேனட் இடையிலான அமைதிப் பேச்சில், மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் முக்கியமான மத்தியஸ்தப் பங்காற்றினார். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, நேற்று நள்ளிரவு முதல் நிபந்தனை இல்லா போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

கம்போடியா-தாய்லாந்து எல்லையில் உள்ள 817 கிலோமீட்டர் பகுதி சிக்கலானதொன்றாக மாறிய நிலையில், அந்த பகுதி போர் மேடையாக மாறுவதைத் தடுப்பதில் அன்வாரின் முயற்சி முக்கிய பங்காற்றியதாக அமிருடின் குறிப்பிட்டார்.

“ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் போர்களால் ஏற்பட்ட பேரழிவுகள் நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம். இந்நிலையில், உலக வல்லரசுகள் வாழ்வியல் மதிப்பை புறக்கணித்து வரும் தருணத்தில், ஆசியான் அமைதிக்குப் பயணிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here