இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஓராண்டை நிறைவு: சுற்றுலாவை ஊக்குவிக்க மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்

இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில், சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் சுந்தரராஜன், “இந்தப் புதிய ஏற்பாடு காரணமாக இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மேம்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்காக ரூ.9,999-க்கு சிறப்புச் சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.

இந்த சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், இந்தியக் கப்பல் கழகத்துக்குச் சொந்தமான சிரியாபாணி கப்பல் இயக்கப்பட்ட நிலையில், பருவநிலை உள்ளிட்ட சில காரணங்களால் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், தனியார் நிறுவனம் முன்வந்து, 150 பயணிகள் கொள்ளளவு கொண்ட சிவகங்கை கப்பலை இயக்கத் தொடங்கியது.

சிறப்பு திட்டம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இத்திட்டம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். இலங்கையில் இரண்டு இரவுகள் தங்கும் வகையில் பயணச்சீட்டுக் கட்டணம், உணவு, தங்குமிடம், வாகன வசதி என அனைத்தும் இதில் அடங்கும்,” என்றார்.

அத்துடன், “முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவு நேர ரயில் மட்டுமே இயங்கிய நிலையில், இந்தக் கப்பல் சேவையால் அதிகமானோர் பயணம் செய்யத் தொடங்கியதால், தற்போது பிற்பகல் நேரத்திலும் குளிரூட்டிய ரயில் இயக்கப்படுகிறது,” என சுந்தரராஜன் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஆன்மிகப் பயணிகள் பெருகி வருவதாகவும், இதன் மூலம் மக்கள் உறவுகள் வலுவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மட்டும் 20,000 பயணிகள் இந்தக் கப்பல் சேவையை பயன்படுத்தியதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கையை சுந்தரராஜன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here