ஜோகூர் மாநிலக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சர்ச்சை; சிகாமாட் ஹோட்டல் பணியாளர்கள் மீது விசாரணை

சிகாமாட்:
தாமான் யாயசான் வர்த்தக மையத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், ஜோகூர் மாநிலக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதாக சமூக வலைதளத்தில் பதிவான புகைப்படம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பக் கண்காணிப்பின் அடிப்படையில், “மெர்டேக்கா மாத” கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹோட்டல் பணியாளர்கள் இருவர் கொடியை ஏற்றியிருப்பது தெரியவந்தது என்று, சிகாமாட் போலீஸ் தலைவர் சூப்பிரண்டெண்ட் அகமட் ஸம்ரி மரின்சா கூறினார்.

அவர்களில் ஒருவரான வெளிநாட்டு தொழிலாளி தவறுதலாக கொடியை தலைகீழாக ஏற்றியுள்ளார். பின்னர், அவரது சக பணியாளர் சுட்டிக்காட்டியதும் உடனடியாகத் திருத்தி வைத்தார். குறித்த தொழிலாளி பாஸ்போர்ட் மற்றும் வேலை அனுமதி உள்ளிட்ட சட்டபூர்வ ஆவணங்களை கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 504, சிறிய குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை ஆவணங்கள் மாநில வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here