இந்திரா காந்தி – பிரசன்னா சந்திப்பு: 17 ஆண்டுகளுக்குப் பின் சமரச முயற்சியில் பாஸ் (PAS) தொகுதித் தலைவர்!

கோலாலம்பூர்:

ருதலைப்பட்ச மதமாற்றம் மற்றும் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மகளைப் பிரிந்து 17 ஆண்டுகளாகப் போராடி வரும் எம். இந்திரா காந்தி, மீண்டும் தனது மகள் பிரசன்னா டிக்ஸாவைச் சந்திக்கத் தேவையான சமரச முயற்சியை மேற்கொள்ளப் போவதாகச் சுங்கை பூலோ பாஸ் தொகுதித் தலைவர் ஜஹாருதீன் முஹமட் அறிவித்துள்ளார்.

“இந்த நீண்டகாலப் போராட்டத்தில் சட்டம் மற்றும் மதம் சார்ந்த அம்சங்கள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டன. இப்போது இது மனிதாபிமானம் மற்றும் தாய்மை சார்ந்த விஷயம்.” என்று, செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது ஜஹாருதீன் தெரிவித்தார்.

“கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகப் பிரிந்திருக்கும் ஒரு தாயையும் மகளையும் மீண்டும் இணைப்பதே எங்களது ஒரே நோக்கம்” என்று அவர் சொன்னார்.

“பிரசன்னாவிற்கு இப்போது 17 வயது. அவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், ஒரு மகளாகத் தனது தாயைச் சந்திக்க அவருக்கு உரிமை உண்டு.”

பிரசன்னா, அவரது தந்தை முஹமட் ரிதுவான் அப்துல்லா அல்லது அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக ஜஹாருதீன் தெரிவித்தார். தேவைப்பட்டால் வெளிநாடுகளுக்குச் சென்றாவது இந்தச் சந்திப்பை உறுதி செய்யத் தான் முன்வருவதாகவும், பிரசன்னாவின் மத விவகாரங்களில் தான் தலையிடப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

ஏன் இப்போது இந்த முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது தேர்தல் அல்லது அரசியலுக்கானது அல்ல என்றும், இந்திரா காந்தியின் நிலையை முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகு ஒரு தனிப்பட்ட மனிதனாக மனிதாபிமான அடிப்படையில் எடுத்த முடிவு என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here