ஜாலான் துங்கு இப்ராஹிம், சுங்கை பட்டாணியில் நேற்று பெரிய மணிக்கூண்டு இருக்கும் இடம் அருகே நிலத்தடி குழியில் இரண்டு நபர்கள் ஒளிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை விசாரித்த போதுதான் அவர்கள் கேபள் கம்பிகளைத் திருட வந்தவர்கள் என்பது அம்பலத்திற்கு வந்தது. பொதுமக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் அண்ணன் – தம்பிகளான இவர்கள் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தனர் என்று கோலமூடா போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
மாலை 4.30 மணி அளவில் கோலமூடா போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயம் இவர்களின் செயல் கண்டறியப்பட்டது. அந்த இரண்டு நபர்களும் நிலத்தடி குழியின் மூடியைத் திறந்து பின்னர் உள்ளே குதித்ததைப் போலீஸ் குழுவினர் பார்த்திருக்கின்றர்.
அவர்கள் நிலத்தடி குழியில் இருந்த கேபள் கம்பிகளை வெட்டி எடுத்து திருடியபோது கையும் களவுமாகப் பிடிபட்டனர். அவ்விருவரும் 42, 44 வயதுடையவர்கள். அவர்கள் வைத்திருந்த சில கருவிகளும் கைப்பற்றப்பட்டன. கைதானவர்கள் விசாரணைக்காக கோலமூடா போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்விருவர் மீதும் ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பில் 12 குற்றப் பதிவுகள் உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை நீடித்து வருகிறது.









