நாட்டின் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஆதரிக்கும் நோக்கில், ‘பேங்க் ரக்யாட்’ வங்கி தனது மெனாரா கெம்பார் வளாகத்தில் 20 மின்னூட்ட (EV) நிலையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. செனெர்ஜி (Cenergi SEA Berhad), ரீசார்ஜ் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம், மின்னூட்ட வசதிகளை வழங்கும் ஆரம்பகட்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாக வங்கியைக் நிலைநிறுத்தியுள்ளது.
பேங்க் ரக்யாட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் ஷாரில் முகமட் ஷாரிஃப் கூறுகையில், இந்த நடவடிக்கை கார்பன் தடத்தைக் குறைக்கவும், 2050-க்குள் ‘நெட் ஜீரோ’ (Net Zero) இலக்கை அடைய நாட்டின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பூமியின் தினத்தை முன்னிட்டு, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் வங்கி இந்த நிலைத்தன்மை அணுகுமுறையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வங்கியின் இந்த பசுமை முயற்சிகள் மின்னூட்ட நிலையங்களுடன் நின்றுவிடவில்லை. முன்னதாக, செனெர்ஜி நிறுவனத்துடன் இணைந்து வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் சூரிய ஒளி மின்சக்தி (Solar PV) அமைப்புகளை வங்கி நிறுவியுள்ளது. அத்துடன், சில்லறை, வணிக வாடிக்கையாளர்களுக்குப் பசுமை நிதித் தயாரிப்புகளை வழங்குவதன் மூலம், குறைந்த கார்பன் தொழில்நுட்பத்திற்கு மாற வங்கி ஊக்கமளித்து வருகிறது. மேலும், தனது வளாகங்களை ‘பசுமைக் கட்டிடக் குறியீட்டு’ (GBI) தரத்திற்கு உயர்த்தும் பணிகளிலும் வங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரி ராஜா









