விஜய் உடன் சேர்ந்து 9 பேர் நாளை அமைச்சராக பதவியேற்பு

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது.

ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

இதையடுத்து, தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் தவெக தலைவர் விஜய் உரிமை கோரினார். மேலும், பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜய் பொறுப்பு கவர்னர் அர்லேகரிடம் வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மாலை பதவியேற்பு விழா நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு ஸ்டேடியத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விஜய் உடன் புஸ்சி அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது கூட்டணி கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினாலும் கூட்டணி கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என விஜய் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here