-மாற்று அரசியல் மலரட்டுமே!
சீமானும் சரி அவரின் தம்பி தங்கைகளும் சரி, அனைவரையும் உறவு முறை கொண்டு அழைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். முருகனை முப்பாட்டன் என்பதில் தொடங்கி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை பெரிய தகப்பன் என்றும், தாங்கள் தலைவராக ஏற்றுக்கொண்ட மேதகு வே.பிரபாகரன் அவர்களையும் அண்ணன் என்று குறிப்பிடும் முறையையே பின்பற்றுகின்றனர்.
பெண்களுக்குச் சம உரிமை
பெண்ணியம், சமூக நீதி பேசி ஆட்சியில் பல காலம் இருந்தாலும் இரண்டு திராவிடக் கட்சிகளும் பெண்களுக்கு அதிகாரத்தில் சம உரிமை கொடுத்ததே கிடையாது. இந்திய கட்சிகள் எதுவொன்றுமே இதுவரை சட்டமன்றத்திலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி பெண்களுக்குச் சம வாய்ப்பினை வழங்கியதே இல்லை.
சாதி, மத வேறுபாடற்ற – தமிழன் என்ற ஓர்மை
ஆரியம் தமிழர்களைச் சாதியாகப் பிரித்து, பண்பாட்டைச் சிதைத்தது. அதற்குச் சற்றும் குறையாமல் திராவிடம் அதே சாதிய உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைந்து வருகிறது. அதுபோல, மத உணர்வைத் தூண்டி நாட்டையே இன்று கபளீகரம் செய்து வருகிறது பாசிச சக்திகள். இத்தகைய சமூகச் சூழலில், “மண்புழு கூட மனிதனுக்கு உதவும். சாதியும், மதமும் உதவாது”, “சாதி, மத வெறி கொண்டவன் மனிதனாகவே இருக்க முடியாது” என்று மேடைதோறும் முழங்கும் சீமான், “சாதி, மதப் பற்றைத் துறந்து தமிழனாக உணர்ந்தால் மட்டுமே தமிழ் தேசியம் சாத்தியம்.” என்கிறார். சாதியைச் சொல்லி வாக்கு சேகரிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மத்தியில், பொதுத் தொகுதிகளில் அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்ட ஆதித்தமிழ்க் குடிகளைத் தேடித்தேடி நிறுத்துகிறார். 2021 தேர்தலில், 16 பொதுத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களை நிறுத்தியுள்ளார். சாதி மத வேறுபாட்டை மறந்து, தமிழன் என்ற ஓர்மை உணர்வைக் கொண்ட ஒரு பெரும் இளையோர்ப் படையைக் கட்டியிருக்கிறார் சீமான்.
முன்னோர் நினைவைப் போற்றுவது
அதுவரை தமிழகத்தில் இருந்த கட்சிகள், தன் கட்சியின் தலைவர்களுக்கு மட்டுமே பிறந்த நாளிலும், நினைவு நாள்களிலும் மரியாதை செலுத்தும் மரபை மாற்றித் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும், மண்ணுக்காகவும் போராடிய பெருந்தமிழர்களின் நினைவு நாட்களில் அவர்கள் நினைவைப் போற்றும் வகையில் அவர்கள் திருவுருவப் படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்துவது, தமிழ்நாடு முழுக்கச் சுவரொட்டிகள் ஓட்டுவது என்று மற்ற எந்தக் கட்சிகளும் இதுவரை செய்யாத முன்னெடுப்பைச் செய்திருக்கிறது நாம் தமிழர் கட்சி! அதுவரை சாதியத் தலைவர்களாக அடையாளப்படுத்தபட்டு, ஒரு வட்டதிற்குள் அடைக்கப்பட்டவர்களை அவர்கள் சாதியத் தலைவர்கள் இல்லை, தமிழ் தேசிய இனத்தின் தலைவர்கள் என்று சாதிவேறுபாடு கருதாது தமிழ் இளைஞர்கள் அனைவராலும் போற்றச்செய்தவர்.
சுற்றுச்சூழல் பாசறை
இயற்கை ஆர்வலர்கள் மட்டுமே சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி இந்தியாவிலேயே முதன்முதலில் ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் பாசறை என்று ஒரு பாசறை அமைத்து பல சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்தது நாம் தமிழர் கட்சி. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளைத் தூர்வாரித் தூய்மைப் படுத்தியுள்ளனர். வெறும் வார்த்தைகளோடு நிற்காமல் பல இலட்சக்கணக்கான பனை விதைகளைத் தமிழகம் முழுதும் விதைத்ததோடு, 2016-லேயே நெகிழிக்கு முற்றிலுமாகத் தடை விதிப்போம் என அறிவித்து, நீர்வழித்தடங்களை அடைத்திருந்த நெகிழிகுப்பைகளை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது. பின்னாளில் நெகிழிக்குப் பகுதியாகத் தமிழக அரசு விதித்த தடைக்கு வித்திட்டக் கட்சி நாம் தமிழர். வேடந்தாங்கல் பறவைகள் சராணலயத்தை நீதிமன்றம் வரை சென்று காத்தது. மண்ணில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்காது அதில் வாழும் ஓர் உயிரினமான மனிதனை மட்டும் காக்கும் அரசியல் பேசிப்பயனில்லை என்பதை உள்ளார்ந்து உணர்ந்து சூழலியலை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பாசறை.
பண்பாட்டுப் புரட்சி
பண்டைய தொல்தமிழர் பின்பற்றி இடையில் நாம் தொலைத்துவிட்ட தொன்ம பண்பாட்டு விழுமியங்களை மீளப்பெறவும், மண்ணின் மகத்தான மரபுக்கூறுகளை மீட்டுருவாக்கம் செய்யவும் வீரத்தமிழர் முன்னணி என்ற பண்பாட்டுப் பாசறை அமைத்துச் செயல்படுகிறது நாம் தமிழர் கட்சி. எந்த மதமாக, எந்தச் சாதியாக இன்று பிரிந்துப் பிளந்து கிடந்தாலும், நாம் எல்லாம் இயற்கையை வழிபட்ட, முன்னோர்களை வழிபட்ட ஒரு தாய் வயிற்று மக்கள் என்ற உண்மையை உலகத்தமிழ் இனத்திற்கு உணர்த்த உருவெடுத்த பண்பாட்டு அமைப்புதான் வீரத்தமிழர் முன்னணி.
தமிழ் மீட்சிப் பாசறை
தமிழ் ஆட்சி மொழியாக இல்லை, அதிகார மொழியாக இல்லை, வழக்காடு மொழியாக இல்லை, வழிபாட்டு மொழியாக இல்லை என்பதை மாற்ற பாசறை அமைத்துக் களத்தில் இறங்கிப் போரிடுகிறது நாம் தமிழர் கட்சி. கட்சியினரின் பிள்ளைகள் முதல் கடைக்கு வைக்கும் பெயற்பலகைகள் வரை வாகன எண்கள் முதல், வாசிக்கும் சொற்கள் வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தில் மட்டுமல்லாமல் வழக்கத்திலும் கொண்டுவந்துள்ளனர்.
இவை தவிரக் குருதி கொடுக்க ஒரு பாசறை, ஊழல் ஓழிக்க ஒரு பாசறை, பேரிடர் மீட்புக்கு ஒரு பாசறை, மாற்றுத்திறனாளிகள் பாசறை என்று பாசறை பல அமைத்து நல்ல அரசியலுக்கான தலைவாசலாக மாறியுள்ளது நாம் தமிழர் கட்சி.









