ஷா ஆலாம்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்கு எதிராக முகநூலில் (Facebook) அவதூறு மற்றும் அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 40 வயது இல்லத்தரசி மீது ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆறு குழந்தைகளின் தாயான சுஹைலா அப்துல் ஹலிம் என்ற அந்தப் பெண், தன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதியன்று, ‘சுஹைலா ஹலிம்’ (Suhaila Halim) என்ற முகநூல் கணக்கின் வழி, பிறரைத் தூண்டும் மற்றும் புண்படுத்தும் நோக்கில் மாமன்னர் குறித்து அவதூறான கருத்துகள் பதிவிடப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் (MCMC) அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபட்லி அப்துல் வஹாப், பிரதிவாதிக்கு 10,000 ரிங்கிட் பிணைத்தொகை விதிக்கப் பரிந்துரைத்தார்.
எனினும், பிரதிவாதியின் குடும்பப் பொருளாதார நிலை மற்றும் அவருக்கு ஆறு குழந்தைகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, செஷன்ஸ் நீதிபதி நூர் ஹாஸ்னியா அப்துல் ரசாக் பிணைத்தொகையை 7,000 ரிங்கிட்டாகக் குறைத்து உத்தரவிட்டார்.
இத்துடன், குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது கடப்பிதழை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், மாதத்திற்கு ஒருமுறை எம்.சி.எம்.சி (MCMC) அலுவலகத்திற்குச் சென்று தனது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.




















