கோலாலம்பூர்:
ஜப்பானின் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் 2.5 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டின் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பின் பூர்வாங்க அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை 123 மில்லியனாகக் குறைந்துள்ளது;
இது கடந்த 2020-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை விட 30 இலட்சத்திற்கும் அதிகமான சரிவாகும்.
1920-ஆம் ஆண்டு இந்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு முறை தொடங்கப்பட்டதற்குப் பிறகு பதிவான மிக மோசமான சரிவு இதுவென்று அந்நாட்டு அரசாங்கத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் மினொரு கிஹாரா கவலை தெரிவித்துள்ளார்.
பிறப்பு விகிதம் தொடர்ந்து 10-ஆவது ஆண்டாகக் குறைந்து கடந்த 2025-இல் வெறும் 7,05,809 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ள வேளையில், திருமணங்கள் மற்றும் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டு வரும் டேட்டிங் செயலிகள், குழந்தை வளர்ப்புப் படிகள் போன்ற பல முயற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே பலனளித்துள்ளன.




















