2026-ஆம் ஆண்டிற்கான பகாங் மாநில அளவிலான ஆங்கில விவாதப் போட்டியில், மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தைத் வென்று சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் அண்மையில் பெரா மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் கல்வி அதிகாரி சக்குவான் பின் மாட் டேசா மாணவர்களை வரவேற்று, மாணவர்களின் கடின உழைப்பைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாநில அளவில் பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு; பள்ளித் தலைமை ஆசிரியர் இந்திரா கிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திருமதி ஷிலா மாதவன் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் ரா. குணசேகரன் ஆகியோர் தங்களது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர். மாணவர்களின் வெற்றிக்கு அரணாக இருந்து, அவர்களைச் சிறந்த முறையில் வழிநடத்திய ஆங்கில ஆசிரியர்களான சந்தேகுமார் மற்றும் ராஜேந்திரகுமார் ஆகியோரின் அயராத அர்ப்பணிப்பிற்குப் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
பி.ராமமூர்த்தி









