தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மைபா மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

எல்லை கடந்த சுற்றுலா, விருந்தோம்பல் துறை மற்றும் முதலீடுகளை வலுப்படுத்துவதற்காக, தாய்லாந்தின் சுற்றுலா மற்றும் வணிக அமைப்புகளுடன் புதிய கூட்டாண்மை மூலம் அந்நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மலேசியா தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.அந்த வகையில் ​மலேசிய பட்ஜெட் மற்றும் வணிக ஹோட்டல் சங்கம் மைபா தாய்லாந்து சுற்றுலா முகவர்கள் சங்கம் , தாய்லாந்து மருத்துவ சுற்றுலா மற்றும் நல்வாழ்வு சங்கம் மற்றும் சி.எச்.ஜி குளோபல் ஆர்கனைசேஷன் ஆகியவற்றுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பானது சுற்றுலா பரிமாற்றத்தை விரிவுபடுத்துவதையும், மருத்துவ மற்றும் நல்வாழ்வு சுற்றுலாவை மேம்படுத்துவதையும், தொழில் துறை சார்ந்தவர்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மைபாவின் தேசியத் தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மிஷேல் கூறுகையில்,​”இந்த ஒத்துழைப்பு விடுமுறைக்காகவோ அல்லது வணிக நோக்கங்களுக்காகவோ மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இருதரப்பு சுற்றுலா மற்றும் முதலீட்டுத் துறைகளில் புதிய வாய்ப்புகளையும் இது உருவாக்கும்.
​இந்த ஒப்பந்தத்தின் மூலம், மைபா உறுப்பு ஹோட்டல்களை தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளுடன் இணைப்பதற்கான ஒரு தளம் உருவாக்கப்படும். இது பொழுதுபோக்கு மற்றும் வணிக நோக்கங்களுக்காக வரும் பயணிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் அதே வேளையில், தாய்லாந்து சுற்றுலா முகமைகளின் சேவைகளைப் பயன்படுத்தும் மலேசிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் ஊக்குவிக்கும்.”​என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மலேசியாவின் பட்ஜெட் ஹோட்டல் மற்றும் வணிகத் துறையை தாய்லாந்து சுற்றுலாப் பயணிகளிடையே இன்னும் பரந்த அளவில் அறிமுகப்படுத்துவதையும், மைபா உறுப்பு ஹோட்டல்களை அவர்களின் முதன்மை தங்குமிடத் தேர்வாக மாற்றுவதையும் இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கணேஷ் கூறினார். தொழில் துறை சார்ந்த கண்காட்சிகள், வணிக மாநாடுகள் மற்றும் நெட்வொர்க்கிங் திட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவதற்கும், இதன் மூலம் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இடையே கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் ஒரு கூட்டு செயற்குழு உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

​மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், தொழில் துறை வலையமைப்பை விரிவுபடுத்தவும், இருதரப்பு பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.​ சுற்றுலா மலேசியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘விசிட் மலேசியா 2026’ நெட்வொர்க்கிங் திட்டம் மற்றும் கருத்தரங்கின் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தநிகழ்வு நடைபெற்றது. மைசார்பாக கணேஷ், துணைத் தலைவர் தஸ்ஸானி கியட்கமச்சோர்ன்சாய் மற்றும் டாக்டர் அனுசக் கொங்மலை ஆகியோருடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

​ அதே வேளையில், பகாங் மாநிலத்தின் மைபா தலைவர் டத்தோஸ்ரீ கே. விஜயேந்திரன், சிஎச்ஜி-இன் நிறுவனர் மற்றும் தலைவரான ஜேக்கி ஓங் உடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.​இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வை பாங்காக்கிற்கான சுற்றுலாத்துறை மலேசிய இயக்குநர் நூர் ஐன் முகமட் யூனுஸ் முன்னிலையில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here