கோலாலம்பூர் :
சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படம் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று சிறுமிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து கோலா பிலா மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, கடந்த புதன்கிழமை காவல்துறைக்கு புகார் கிடைத்தது.
சம்பவத்தன்று 15 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், சமூக வலைதளங்களில் தனது புகைப்படம் பரப்பப்பட்டது குறித்து உருவான முரண்பாடுகளைப் பேசுவதற்காகத் தனது சகோதரருடன் ‘டத்தாரான் மேலாங்’ பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு அறிமுகமான இரண்டு சிறுமிகளை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியதில், அந்த 15 வயது மாணவி காயமடைந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்பிய மாணவி, மறுநாள் தனது தந்தையுடன் சென்று சம்பந்தப்பட்ட ஒரு சிறுமியின் வீட்டில் இது குறித்துப் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கோலா பிலா மாவட்ட காவல் தலைமை கண்காணிப்பாளர் முகமட் முஸ்தஃபா ஹுசின், “இச்சம்பவத்தை காவல்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. மோதலுக்கான உண்மையான காரணம் என்ன என்பதையும், இதில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்























