16ஆவது பொதுத் தேர்தலில் மஇகா குறைந்தது 5 நாடாளுமன்ற இடங்களையாவது வெல்ல வேண்டும் – ஜாஹிட்

ஜோகூர் பாரு: பாரிசான் நேஷனல்  தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி, 16ஆவது பொதுத் தேர்தலில் மஇகா குறைந்தது ஐந்து நாடாளுமன்ற இடங்களையாவது வெல்ல வேண்டும் என விரும்புகிறார். அம்னோ தலைவராகவும் இருக்கும் ஜாஹிட், ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களில் மஇகா மாநில இடங்களை வெல்ல உதவிய பாரிசான் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் இயந்திரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, கட்சி மேலும் நாடாளுமன்ற இடங்களைப் பெற வழிவகுக்கும் வகையில் தொடர வேண்டும் என்று கூறினார்.

மஇகா ஒருமுறை ஐந்து இடங்களைக் கொண்டிருந்தது போலவே, 16ஆவது பொதுத்தேர்தலும் கட்சி குறைந்தது ஐந்து இடங்களையாவது வெல்லும் என்று நம்புகிறேன் என்று மஇகாவின் 80ஆவது தேசிய மாநாட்டைத்  தொடங்கி வைத்துப் பேசுகையில் தெரிவித்தார். மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மசீச தலைவர் வீ கா சியோங், மக்கள் முன்னேற்றக் கட்சி (பி.பி.பி) தலைவர் லோக பாலா மோகன், ஜோகூர் பாரிசான்  தலைவரும் மந்திரி பெசாருமான  ஒன் ஹபீஸ் காசி ஆகியோரும் உடனிருந்தனர்.

துணைப் பிரதமராகவும் இருக்கும் ஜாஹிட்,  கட்சிக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை, கட்சியின் எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாகவே இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், அது போட்டியிட்ட ஒவ்வொரு இடத்திலும் வெற்றி பெறுவதற்கு அதன் தேர்தல் இயந்திரம் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டினார். 15ஆவது பொதுத் தேர்தலில் மஇகா 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் பேராக் மாநிலத்தில் உள்ள தாப்பா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அங்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ சரவணன் 5,064 வாக்குகள் பெரும்பான்மையுடன் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

மேலும், ஜோகூர் மந்திரி பெசாராக இருக்கும் ஒன் ஹபீஸுடன் நல்லுறவைப் பேணுமாறு விக்னேஸ்வரனுக்கு ஜாஹிட் அறிவுறுத்தினார். 16ஆவது பொதுத் தேர்தலில் தலைவர் அந்த மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடக்கூடும் என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்தார். டான் ஸ்ரீ விக்கி (விக்னேஸ்வரன்), ஜோகூர் மந்திரி பெசாருடன் நல்லுறவைப் பேணுங்கள். அந்தத் தொகுதி பாதுகாப்பானது என்று எனக்குத் தெரியும். அது பாதுகாப்பாக இருந்தால், டான் ஸ்ரீ விக்கியும் பாதுகாப்பாக இருப்பார் என்று அவர் கூறினார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 16ஆவது பொதுத் தேர்தலில் செகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் விக்னேஸ்வரன் போட்டியிடுவாரா என்று கேட்கப்பட்டபோது, ஜாஹிட் சரியான நேரம் வரும்போது, நான் வேட்பாளர்களின் நியமனக் கடிதம் கையெழுத்திடுவேன் என்று பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here