அண்ணன் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தம்பியும் சாவு – கேரளத்தில் சோகம்

திருவனந்தபுரம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், அண்ணன் மாரடைப்பால் மரணமடைந்த அதிர்ச்சியில் தம்பியும் அடுத்த 3 மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயங்கி விழுந்தார்

காசர்கோடு மாவட்டம் கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ண பட் (வயது 70). இவரது தம்பி கேசவ பட் (65). அண்ணன், தம்பி இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில், ராமகிருஷ்ண பட் அங்குள்ள மாட்டுத்தொழுவத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் திடீரென அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.

அண்ணன் மரணம்

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராமகிருஷ்ண பட்டை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

தம்பியும் பலி

அண்ணனின் உடலை பார்த்து தம்பி கேசவ பட் கதறி அழுதார். இந்த நிலையில், இரவு 10 மணி அளவில் கேசவ பட்டும் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி வீட்டிலேயே மயங்கி விழுந்தார். பதறிப்போன உறவினர்கள் அவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கேசவ பட்டும் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சோகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் அடுத்தடுத்து 3 மணி நேர இடைவெளியில் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here