நாய்கள் தாக்கிய சிறுமியின் முழு சிகிச்சைச் செலவை ஜோகூர் அரசு ஏற்கும்.

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

தெருநாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வரும் இரண்டு வயது சிறுமி நூர் ஹைரா வாஃபிகாவின் முழு சிகிச்சை, மறுவாழ்வுச் செலவுகளை ஜோகூர் மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று மாநில இஸ்லாமிய சமய விவகாரக் குழு உறுப்பினரும் செமரா சட்டமன்ற உறுப்பினருமான முகமட் ஃபாரெட் முகமட் காலிட் தெரிவித்தார். சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியைப் பார்வையிட்டு, அவரது பெற்றோரைச் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

பத்து பகாட், பெசெராய், கம்போங் தம்பாக் பகுதியில் செப்டம்பர் 5ஆம் தேதி ஐந்து தெருநாய்கள் தாக்கியதில் நூர் ஹைரா பலத்த காயமடைந்தார். அவர் தொடர்ந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

சிறுமி நீண்டகாலச் சிகிச்சையையும் மறுவாழ்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக முகமட் ஃபாரெட் கூறினார். இதனால் குடும்பத்தினர் எதிர்கொள்ளக்கூடிய நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் முழுச் செலவையும் மாநில அரசு ஏற்கும் என்றார்.

சிறுமியைத் தாக்கியதாக நம்பப்படும் நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, அவை வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த அவற்றைப் பிடிப்பது மிகவும் அவசியம் என்றார்.

பத்து பகாட் மாவட்ட அலுவலகம் தலைமையில் பெரிய அளவிலான நாய் பிடிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. பத்து பகாட்நகராண்மைக் கழகம், கால்நடை மருத்துவச் சேவைத் துறை, மலேசிய அரச போலீஸ் ஆகிய தரப்புகளும் இதில் ஈடுபட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 12, 26, 30ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 22 தெருநாய்கள் பிடிக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் இன்னும் அதிகமான தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது தொடங்கப்பட்டுள்ள நடவடிக்கை ஒரு வாரத்திற்குத் தொடர்வதோடு, தேவைக்கேற்ப நீட்டிக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், காயமடைந்த நூர் ஹைராவின் படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதை உடனடியாக நிறுத்துமாறு முகமட் ஃபாரெட் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

அந்தப் படங்கள் குடும்பத்தினரின் மனவேதனையை மேலும் அதிகரிப்பதால், ஏற்கெனவே பகிர்ந்தவர்கள் அவற்றை நீக்க வேண்டும் என்றும் குடும்பத்தின் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நூர் ஹைரா விரைவில் குணமடைய ஜோகூர் மக்களும் அனைத்து மலேசியர்களும் தொடர்ந்து பிரார்த்திக்க வேண்டும் எனவும் முகமட் ஃபாரெட் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here