சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி! முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸுக்கு எதிரான வழக்கைத் தொடர்கிறார் ஷாரிர் சமாட்!

கோலாலம்பூர், 

மலேசியாவின் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸுக்கு எதிராக முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிர் சமாட் தொடர்ந்துள்ள, தீய நோக்கத்துடன் வழக்குத் தொடரப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும் சிவில் வழக்கு, சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கான் டெச்சியோங் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ஷாரிரின் வழக்கறிஞர் ஃபிரோஸ் ஹுசேன் அஹ்மட் ஜமாலுதீன் இதனைத் தெரிவித்தார்.

வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, டோமி தோமஸுக்கு எதிரான சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தனது கட்சிக்காரர் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். மேலும், ஷாரிர் தரப்பில் எட்டு சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதிகளில் நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அன்றைய தினங்களில் டோமி தோமஸின் வழக்கறிஞர் அலன் அட்ரியன் கோமஸ், ஷாரிர் சமாட்டிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு டோமி தோமஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் லத்தீஃபா கோயா மற்றும் அரசாங்கம் ஆகியோருக்கு எதிராக ஷாரிர் இந்தச் சிவில் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், கடந்த செப்டம்பர் மாதம் லத்தீஃபா கோயா மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோரிக்கைகளைச் சமரசத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்த ஷாரிர், டோமி தோமஸுக்கு எதிரான வழக்கையும் கைவிடுவது குறித்து ஆலோசித்து வந்தார்.

ஆனால், வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை வாசிக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகளை டோமி தோமஸ் தரப்பு முன்வைத்திருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், வழக்கைத் தொடர்ந்து நடத்த ஷாரிர் முடிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here