கோலாலம்பூர்,
மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய எல்லைப் பொருளாதார மண்டலத் திட்டத்திற்கான ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெர்லிஸ், கெடா, பேராக் மற்றும் கிளந்தான் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு, இரு நாடுகளுக்கிடையிலான எல்லை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று மக்களவையில் நடைபெற்ற சிறப்பு அவை அமர்வில் இதனைத் தெரிவித்த பொருளாதாரத் துணையமைச்சர் டத்தோ மொஹமட் ஷஹார் அப்துல்லா, பெர்லிஸ் மாநிலத்தின் வாங் கெலியான் பகுதியில் தனியாகப் புதிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.
அதற்குப் பதிலாக, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள வடக்கு பிராந்திய பொருளாதார மண்டலம் (NCER) மற்றும் எல்லைப் பொருளாதார மண்டலம் (BEZ) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் வடக்கு பிராந்திய அமலாக்க ஆணையத்தின் (NCIA) பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படுவதைத் தவிர்ப்பதுடன், மலேசியா – தாய்லாந்து எல்லை வர்த்தகத்தின் முழுத் திறனையும் பயன்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தாய்லாந்து அரசாங்கமும் உலக வங்கியுடன் இணைந்து மலேசிய எல்லையை ஒட்டிய தனது பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் தொடர்பான ஆய்வை இறுதிப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் எல்லைப் பொருளாதார மண்டல மேம்பாட்டுத் திட்டங்கள், மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதிகளுக்கான கூட்டு மேம்பாட்டு உத்திக் குழுவின் (JDS) மூலம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் துணையமைச்சர் கூறினார்.
மேலும், மலேசியா அண்டை நாடுகளுக்கிடையிலான வர்த்தகப் பொருட்கள் கடந்து செல்லும் இடமாக மட்டும் இருக்காமல், மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி மற்றும் பொருட்களைப் பதப்படுத்தும் தொழில்துறைகளிலும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தற்போது எல்லைப் பகுதிகளில் பெர்லிஸ் உள்நாட்டுத் துறைமுகம் (PIP), சூப்பிங் பள்ளத்தாக்கு மற்றும் புக்கிட் காயு ஹித்தாம் மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெர்லிஸ் உள்நாட்டுத் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 100,000 TEU சரக்குக் கொள்கலன் அலகுகளைக் கையாளும் நிலையில், இந்த எண்ணிக்கை 180,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், குறைக்கடத்திகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாய உணவுப் பொருட்கள், ஹலால் தயாரிப்புகள் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அதிக மதிப்புடைய துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் துணையமைச்சர் தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகளின் வளர்ச்சி, பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து இணைப்புகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் விரிவுபடுத்தும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.























