ஆள்கடத்தல் அல்ல; உறவினர்களுடன் சுற்றுலா சென்ற சிறுவர்கள்! நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய தகவல்!

தாப்பா:

பேராக் மாநிலம், ஈப்போ அருகே சிம்பாங் பூலாய் பகுதியில் வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்ட நான்கு சிறார்களும் ஆள்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும், உறவினர்களான அவர்கள் ஒன்றாக வெளியே சுற்றச் சென்றிருந்ததாகவும் போலீஸ் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, நவம்பர் 20ஆம் தேதி, சிம்பாங் பூலாய் அருகே வடக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், அரசாங்க ஊழியர்கள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்குத் தடையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பதின்ம வயதுடையவர்கள் என்பதுடன், ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களில் சிலரிடம் கார் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உணவக உதவியாளராகப் பணியாற்றி வருவதாகவும், மேலும் இருவர் வேலையின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய Toyota Cherry எனக் குறிப்பிடப்பட்ட பல்நோக்கு வாகனத்தையும் போலீசார் மேலதிக விசாரணைக்காகப் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வருக்கும் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்பதுடன், அவர்களுக்கு முந்தைய குற்றப் பதிவுகளும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கெடா மாநிலம் ஜித்ராவில் விசாரணைக்கு உட்பட்டுள்ள மற்றொரு வழக்குடன் சிறுமிக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஆள்கடத்தல் தொடர்பான குற்றச்செயல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், உறவினர்களாகிய சிறார்கள் வெளியே சுற்றச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் போலீஸ் வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here