இந்தியாவின் அருணாசல பிரதேசம் எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி: சீன வெளியுறவு அமைச்சகம் மீண்டும் சர்ச்சை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது.

இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. அருணாசல பிரதேசத்துக்கு ஜாங்னான் என பெயர் சூட்டி உள்ளது. இதற்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது.

சீனாவின் ஆத்திரமூட்டும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று வெளியிட்ட செய்தியில், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்றளவும் உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வருங்காலத்திலும் எப்போதும் இதே நிலை தொடரும் என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், அவர்களின் இதுபோன்ற அறிக்கைகளை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது ஒன்றும் முதன்முறையல்ல. இதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் மறுக்கிறோம். இந்தியாவில் இருந்து பறிக்கப்பட முடியாத பகுதியாக அருணாசல பிரதேசம் நீடிக்கும். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டும் முயற்சியால், இந்த உண்மையை மாற்ற முடியாது என்று தெரிவித்து உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தில் உள்ள 6 பகுதிகளுக்கு இவ்வாறு சீனா பெயர் சூட்டியிருந்தது. கடந்த 2021-ம் ஆண்டும் இதேபோன்று, அருணாசல பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அந்த வகையில் அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள் மற்றும் ஒரு மலைக்கணவாய் ஆகியவற்றுக்கு சீன, திபெத் மற்றும் ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டது. திபெத்தின் தெற்கு பகுதி தங்களின் உள்ளார்ந்த பகுதி என்றும் தெரிவித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஜி-20 கூட்டம் ஒன்று நடந்தது. இதில் சீனா பங்கேற்கவில்லை. இதற்கான காரணமும் சீன அரசு சார்பில் வெளியிடப்படவில்லை.

இந்த சூழலில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான மாவோ நிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஜாங்னான் (அருணாசல பிரதேசம்) சீனாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி. அதனால், மாநில கவுன்சிலின் புவியியல் பெயர்களுக்கான நிர்வாகத்தினரின் தொடர்புடைய நிபந்தனைக்கு உட்பட்டு, சீன அரசின் தொடர்புடைய செயல் அதிகாரிகள் ஜாங்னானின் சில பகுதிகளுக்கு பெயர்களை தரவரிசைப்படுத்தி உள்ளனர். அது சீனாவின் இறையாண்மை உரிமைகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்பட்டது என கூறியுள்ளார். இதனால், மற்றொரு சர்ச்சையை மீண்டும் சீனா கிளப்பி உள்ளது.

பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலை சிகரங்கள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், இரண்டு நில பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும். சீனாவால் உரிமை கோரப்படும் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டுவதன் மூலம் அவற்றை தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது. சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்த பெயர்களை வெளியிட்டது. எனினும், இந்திய பகுதியில் உரிமை கோரும் சீனாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா நேற்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

அருணாசல பிரதேச பகுதிகளில் மறுபெயர்களை சூட்டுவதற்கும் அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here