ரெம்பாவ், டிசம்பர் 27 :
நெகிரி செம்பிலானின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், வடக்கு நோக்கி செல்லும் கிலோமீட்டர் 241.6 இல் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் டிரெய்லரில் மோதி இரண்டு பேர் இறந்தனர்.
லோரி ஓட்டுநராகப் பணிபுரிந்த சைபுடின் அப்துல்லா (50) மற்றும் வாகன ஆய்வு மையத்தின் (புஸ்பகம்) அலுவலக பணியாளராக வேலைசெய்யும் மோகனா கிருஷ்ணன் (49) என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரெம்பாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் ஹஸ்ரி முகமட் கூறுகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் சைஃபுடின் ஓட்டிச் சென்ற லோரி எரிபொருள் தீர்ந்ததால், அவசரப் பாதையில் நின்றபோது, விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த மோகனா, லோரி ஓட்டுநருக்கு உதவும் வகையில் அவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போத்தல்களில் எரிப்பொருள் வாங்கிக் கொண்டு வந்த பொழுது, ஆயர் கெரோ – செனவாங்கிற்குச் செல்லும் திசையில் இருந்து வந்த ஒரு டிரெய்லர், லோரியின் வலது பக்கத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பலியானவர்கள் மீது மோதியது.
“பாதிக்கப்பட்ட இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்ததன் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
“டிரெய்லரின் ஓட்டுநர் தனது வாகனத்தை விட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டார். அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் கூறினார்.
உடலை அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹஸ்ரி கூறினார்.
மேலும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.









