ஓரவஞ்சனை வேண்டவே வேண்டாம்

மருத்துவத்திற்கு நிறம் கிடையாது!

நாட்டில் மருத்துவத்துறை பட்டதாரிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேலை இடங்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறியிருக்கிறார்.

காலி இடங்களை நிரப்புவதற்குரியவர்களைத் தேர்வு செய்வதற்கு அமைச்சில் மூன்று மதிப்பீட்டு செயற்குழுக்கள் உள்ளன. அவற்றின் முடிவுகளின் அடிப்படையில்தான் காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த மதிப்பீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களும் வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இங்கு இரண்டு விஷயங்களை டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் தெளிவுபடுத்த வேண்டும்.
1. ஆண்டுதோறும் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்யப் போகிறது? ஆண்டுக்கு இத்தனை டாக்டர்களைத்தான் பணியில் அமர்த்த முடியும் என்றால், அத்துறை படிப்புக்கான எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியதுதானே!

அப்படியே பணியில் அமர்த்தினாலும் அவர்களை ஒப்பந்த அடிப்படையிலேயே அமர்த்துவது என்பது நியாயமா? தர்மமா? இதனால் அந்த இளம் டாக்டர்கள் அல்லது மருத்துவ அதிகாரிகள் எதிர்நோக்கும் இன்னல்களை, துன்பங்களை அரசாங்கம் அறியுமா? வீடு வாங்குவதற்கோ, கார் வாங்குவதற்கோ அல்லது உடன் பிறந்தவர்களைப் படிக்க வைப்பதற்கோ வங்கிளில் கடன் கூட அவர்களால் பெற முடியவில்லையே! இதாவது அரசாங்கத்திற்குத் தெரியுமா?

மனித உயிர்களைக் காப்பதுதான் மருத்துவத்தின் அடிப்படைத் தாத்பரியம். இந்த உன்னத சேவையில் இனம், சமயம், நிறம், ஒருவரது சமூக – பொருளாதார பின்பலம் போன்றவற்றால் எடை போடுவது நியாயமா – சரியா?

2. காலி இடங்களை நிரப்புவதற்கு சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு மூன்று மதிப்பீட்டு செயற்குழுக்கள் உள்ளன. அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்களும் வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த மதிப்பீட்டு செயற்குழுக்களில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? அவர்களுக்காக வகுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டிகள் என்ன? அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஒரு மருத்துவப் பட்டதாரி பணியில் சேர்க்கப்படுவதற்கான அளவுகோல்தான் என்ன?

அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள வெளிநோயாளிகள்  அவசர சிகிச்சைப் பிரிவுகளில் டாக்டர்கள் போதாமல் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்களே! – இதையெல்லாம் எந்தக் கணக்கில் – மதிப்பீட்டில் சேர்ப்பது?

பட்டப்படிப்பை முடித்த பின்னர் அந்த இளம் டாக்டர்கள் வேலை வாய்ப்புக்காக மாதக் கணக்கில் காக்க வைக்கப்படுவது ஏன்?

இக்காலகட்டத்தில் அந்த இளம் டாக்டர்கள் மன ரீதியாகவும் மன உளைச்சல்களாலும் பாதிக்கப்பட்டு துன்புறுவதாவது தெரியுமா?

இவற்றையெல்லாம் கடந்த வேலையில் சேர்ந்தால் பயிற்சிக் காலத்தில் உயர் அதிகாரிகளிடம் அவர்கள் சிக்கித் துன்பப்படுவதாவது தெரியுமா? சில கொடூர உயர் அதிகாரிகளின் காமச் சேட்டை வலைகளில் இந்த இளம் டாக்டர்கள் குறிப்பாக பெண்கள் சிக்கிப் பரிதவிப்பதாவது தெரியுமா?

தகவல் ஊடகங்களில் எத்தனையோ முறை இந்தக் கொடுமைகள் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டும் இன்னும் தொடர்கதையாகத்தான் நீடிக்கிறது.

இது தவிர இனம், சமயம், நிறம் ரீதியிலும் இளம் டாக்டர்கள் காயப்படுத்தப்படுகின்றனர். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்கு சிறப்பான மருத்துவச் சேவைகளை வழங்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ள இளம் டாக்டர்கள் இதனால் மனம் நொந்து வேதனையில் புழுங்குவதையும் அமைச்சர் அறிவாரா?

இன்றைய கோவிட்-19 பெருந்தொற்று மனிதர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் பட்சத்தில் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு சேவையில் இருக்கும் டாக்டர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இளம் டாக்டர்களுக்கு ஒரு வாய்ப்புத் தந்து பாருங்கள். கொரோனாவை அடித்துத் துவம்சம் செய்யும் ஆற்றலையும் திறனையும் கொண்டிருக்கும் இந்த இளம் டாக்டர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.

பி.ஆர். ராஜன்