காஷ்மீர் சூழ்நிலையில் முன்னேற்றம்!

 – அமெரிக்கா அறிக்கை

அமெரிக்க அதிபராக பிடன் பொறுப்பேற்ற பின்னர் அந்நாட்டின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள முதல் மனித உரிமைகள் அறிக்கையில், ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன்;
மனித உரிமை நடைமுறைகள் பற்றிய 2020- ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் வெளியிட்டார்.
அதில் தங்கள் நாட்டில் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பது பற்றியும் குறிப்பிட்டார். இனவெறி உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகளை புறக்கணிக்க மாட்டோம், வெளிப்படையாக நிவர்த்தி செய்வோம் என்றார்.
மேலும், அவ்வறிக்கையில் சீன அரசாங்கம் உய்குர் இன மக்களை இனப்படுகொலை செய்ததாகவும், ரஷ்ய அரசாங்கம் எதிர்கட்சியினரை குறி வைத்ததாகவும், சிரிய தலைவர் பஷர் அல் ஆசாத் தனது மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அறிக்கையில் இந்தியா தொடர்பான பகுதியில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலையை மீட்டெடுக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. சில பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கியது. அரசியல் தலைவர்களை காவலில் இருந்து விடுவித்துள்ளது. ஜனவரியில் இணைய பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தது.
இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் அதிவேக 4ஜி மொபைல் இணைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. என கூறியுள்ளனர்.இந்தியாவில் குறிப்பிடத்தக்க மனித உரிமைகள் பிரச்சினைகள் இருப்பதையும் அதில் பட்டியலிட்டுள்ளனர்.
போலீஸால் நடக்கும் சட்டவிரோத கொலைகள். தடுப்பு காவல்கள், அரசியல் கைதுகள், கருத்து சுதந்திரம், பத்திரிகைகள் மீதான அடக்குமுறைகள், ஊடகவியலாளர்களுக்கு எதிரான வழக்குகள், சமூக ஊடக பேச்சு போன்றவற்றிற்கு எதிராக கிரிமினல் அவதூறுச் சட்டங்களைப் பயன்படுத்துதல், என்.ஜி.ஓ.,க்களுக்கு எதிரான அதிகப் படியான கட்டுப்பாட்டுகள், மத சுதந்திரம் மீறப்படுவதை சகித்துக்கொள்வது, பெண்கள் உட்பட சிறுபான்மையினரை குறிவைத்து வன்முறைகள், குற்றங்கள் நடக்கின்றன என அதில் குறிப்பிட்டுள்ளனர்.