இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது

கொழும்பு:

லங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு SriLankan Airlines சேவைக்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இடம்பெற்ற பல மில்லியன் ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். அவரிடம் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6 ஏர்பஸ் A330 மற்றும் ஏர்பஸ் A350 ரக விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகவும், மில்லியன் கணக்கில் லஞ்சம் கைமாறியதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் விமான சேவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்சவிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் அடிப்படையில் இந்த அதிரடி கைது நடந்துள்ளது.

அவரை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் இலங்கையின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here