போக்குவரத்துத் துறையின் அடுத்தகட்ட பாய்ச்சல் ஹைப்பர்லூப் போக்குவரத்து. விமானம், புல்லட் ரயிலை விட அதிவேகமாக செல்லக்கூடிய ஒரு போக்கு வரத்தாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்தைக் கூட ஒரு மணி நேரத்துக்குள் அடைந்துவிடலாம். ஒரு ராட்சத குழாய்க்குள் சாலை அமைக்கப்பட்டு மின்மோட்டார்கள் மூலம் காந்தவிசையைக் கொண்டு வாகனங்கள் உந்தித் தள்ளப்படும்.
வழக்கமான போக்குவரத்தில் பயணத்தின் போது ஏற்படும் காற்றுத் தடை மற்றும் எதன் மீதாவது வாகனங்கள் உராய்வதால்தான் வேகம் குறைந்துவிடுகிறது. ஹைப்பர்லூப்பில் காற்றுத் தடை, உராய்வு போன்ற விஷயங்களுக்கே இடமில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஹைப்பர்லூப் போக்குவரத்தைப் பற்றி சிந்தித்திருக்கின்றனர்.
ஆனால், அதற்கான தொழில்நுட்பம், வசதி இல்லாததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த மாதிரியான விஷயங்களில் பேரார்வம் உடைய ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனர் எலன் மஸ்க், 2013-இல் ஹைப்பர்லூப் போக்குவரத்தை தூசி தட்டி எடுத்தார். ராட்சதக் குழாய், அதற்குள் சாலை, ஆயிரம் கிலோ மீட்டர் வேகம் என அவர் சொன்னபோது எல்லோரும் மஸ்க்கை கேலி செய்தனர்.
‘‘இந்தாளுக்கு இதே வேலையாப் போச்சு…’’ என்றனர். இந்நிலையில் ‘வர்ஜின்ஸ் ஹைப்பர்லூப் ஒன்’ நிறுவனம் சவுதி அரே பியாவில் ஹைப்பர்லூப் சாலை அமைக்க அரசிடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. புல்லட் ரயிலை விட பத்து மடங்கு வேகத்தில் வாகனங்கள் இதில் இயக்கப்படும். 76 நிமிடங்களில் ரியாத்தில் இருந்து ஜெட்டா செல்லும். இப்போது இதற்கு 10 மணி நேரம் எடுக்கிறது. கேலி செய்தவர்கள் எல்லாம் இப் போது எலன் மஸ்க்கை புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.