ஆர்கானிக் உணவு, ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ், ஆர்கானிக் உடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கார் கூட ஆர்கானிக்கா? என்ற கேள்வி எழுவது இயல்பு தான். ஆனால், இதற்கான ஆராய்ச்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன மேற்கத்திய நாடுகள்.உலக வெப்ப மயமாதலுக்கு மூல காரணம் கார்பன் தான்.
இந்தக் கார்பனை அதிகளவில் வெளியிடும் வாகனம் கார். அதனால்தான் பல நாடுகள் பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களைத் தடை செய்து எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டுவர முயற்சி செய்துவருகின்றன. இதன் அடுத்த கட்டமாக காரின் உதிரிப்பாகங்களை ஆர்கானிக்காக வடிவமைப்பது குறித்து பரிசோதனை செய்து வருகிறார்கள் போலந்து விஞ்ஞானிகள்.
ஆராய்ச்சியாளர் செலினா, மனிதன் உணவுக்குப் பயன்படுத்தாத தாவரங்களிலிருந்து சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காத பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளார். இப்படி தாவரங்களிலிருந்து உருவாகும் பயோ-பிளாஸ்டிக்கைக் கொண்டு காரின் டேஷ் போர்டு, அதன் உள்பாகங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இப்படி பயோ-பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் காரிலிருந்து வெளியேறும் கார்பனின் அளவு குறையும் என்று நம்புகிறார் கோமலா. இவர்தான் இந்த ஆராய்ச்சி மற்றும் திட்டத்தின் தலைவர். இதுபோக இயற்கைபொருட்களிலிருந்து காரின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும்போது அது வெளியிடும் பசுமைக்குடில் வாயுவின் அளவும் குறையும். தவிர, இப்போது பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கூட மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத்தான் கார் தயாரிப்பில் பயன்படுத்துகின்றன.
பயோ-பிளாஸ்டிக் முறையைப் பயன்படுத்தி அடுத்த வருடம் காரைத் தயாரிக்கத் திட்டம் தீட்டியுள்ளனர். ஆனாலும் இதற்கு ஆகும் செலவு அதிகம். தவிர, காரின் விலையும் மிக அதிகமாக இருக்கும். இப்போது ஐரோப்பிய கார் நிறுவனங்களும் கார்பனைக் கட்டுப்படுத்த பல முறைகளைக் கையாண்டு வருகின்றன.
குறைவான கார்பனை வெளியிடும் கார்களுக்குத்தான் அங்கே அனுமதியே வழங்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் கார் மூலமாக வெளியான கார்பனின் அளவு 24 % குறைந்துள்ளது. அதே நேரத்தில் கார்களின் விற்பனை எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளது.